அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸ் குறித்த மீம்ஸ்களை பார்த்த நடிகை கங்கனா ரனாவத் ’இந்தியா எவ்வளவோ பரவாயில்லை, அமெரிக்கர்கள் மிகவும் மோசம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மோதுவதாக இருந்தது. ஆனால் திடீரென ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகி கமலா ஹாரிஸ் அவர்களுக்கு ஆதரவளித்ததை அடுத்து எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்காக நேருக்கு நேர் மோத உள்ளனர்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைப் பற்றி மீம்ஸ்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கமலா ஹாரிஸ் 29 வயதாக இருந்தபோது 60 வயது மேயர் வில்லி என்பவர் உடன் பழகி வந்ததாக மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த மீம்ஸ்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். நான் கமலா ஹாரிஸ் கட்சியை ஆதரிக்கவில்லை, ஆனாலும் ஒரு மதிப்புமிக்க பெண் தலைவரை இப்படி கீழ்த்தரமாக பேசுவதையும், மீம்ஸ்களை பதிவு செய்வதையும் கண்டிக்கிறேன்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இது போன்ற பிற்போக்குத்தனமான விஷயங்களை பார்க்கும் போது இந்தியா எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் மோசமானவர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். கங்கனா ரனாவத் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.