இந்தியர்கள் மோசடியாளர்கள்.. காப்பி அடித்து அதிக மார்க்குகள் வாங்குகிறார்கள்.. இந்தியர்களால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கிறது.. பெற்றோர்களையும் அழைத்து வந்துவிடுகிறார்கள்.. அமெரிக்காவை இந்திய கிராமமாக மாற்றுகிறார்கள்..அமெரிக்க எழுத்தாளர் கடும் விமர்சனம்..!

அமெரிக்காவின் வலதுசாரி அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளரான அன்னே கோல்டர் , வெளிநாட்டு திறமையாளர்கள் குறித்து டொனால்டு டிரம்பின் சமீபத்திய கருத்துக்கு பதிலளிக்கும்போது, இந்தியர்கள் மற்றும் சீனர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று கூறி ஒரு பெரும்…

ann counter

அமெரிக்காவின் வலதுசாரி அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளரான அன்னே கோல்டர் , வெளிநாட்டு திறமையாளர்கள் குறித்து டொனால்டு டிரம்பின் சமீபத்திய கருத்துக்கு பதிலளிக்கும்போது, இந்தியர்கள் மற்றும் சீனர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று கூறி ஒரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஒரு பாட்காஸ்டில் பேசிய அன்னே கோல்டர், H-1B விசா விவாதம் குறித்து பேசுகையில், இந்திய மற்றும் சீன தொழில் வல்லுநர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இந்தியர்கள் மற்றும் சீனர்கள் அதிக மதிப்பெண் பெறுவது பெரும்பாலும் ஏமாற்றுதல் காரணமாக இருக்கலாம். அவர்கள் ஜன்னல்கள் வழியாக ஊர்ந்து சென்று மற்றவர்களுக்கு பதில்களை அனுப்புவது போன்ற புகைப்படங்கள் உள்ளன.

H-1B திட்டம் அமெரிக்க வேலைகளை பறிப்பதுடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் முழு கிராமத்தையும் அமெரிக்காவுக்கு அழைத்து வர அனுமதிக்கிறது. இந்தியர்கள் மற்றும் சீன H-1B தொழிலாளர்கள் வந்து, உடனடியாக சமூகப் பாதுகாப்பு பலன்களை பெற தங்கள் வயதான பெற்றோர்களை அழைத்து வருகின்றனர். நீங்கள் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்” என்றும் கோல்டர் அப்பட்டமாக தவறான தகவலை பரப்பினார்.

ஆனால் உண்மையில் H-1B தொழிலாளர்கள் தங்கள் பெற்றோருக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது. மனைவி மற்றும் 21 வயதுக்குட்பட்ட சார்ந்துள்ள குழந்தைகளை மட்டுமே உடன் அழைத்து வர முடியும். தங்கள் குழந்தை அமெரிக்க குடிமகனாக ஆகி, குறைந்தது 21 வயதை அடைந்தால் மட்டுமே பெற்றோர்கள் குடிவரவு செய்ய முடியும். ஓய்வூதிய பலன்களை பெற, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும். எனவே, எந்தவொரு H-1B பெற்றோரும் உடனடியாக அந்த சலுகையை அணுக முடியாது.

சமீபத்தில், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவிற்கு சில வெளிநாட்டு திறமைகள் தேவை என்று கூறியதற்கு கோல்டர் பதிலளிக்கும் விதமாக இந்த கருத்துகளைத் தெரிவித்தார். டிரம்பின் இந்த நிலைப்பாடு, அவரது ஆதரவு தளமான MAGA வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், டிரம்ப் இதற்கு முன்பு H-1B திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தவர். டிரம்ப் தனது நிலைப்பாட்டை சற்றே தளர்த்தியபோது, அன்னே கோல்டர் போன்ற வலதுசாரி விமர்சகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி, இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பிவிட்டனர்.

H-1B திட்டம் என்பது அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் அறிவியல் போன்ற சிறப்புத் துறைகளில் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் ஒரு திட்டமாகும். இது புதுமைக்கு அவசியம் என்று ஆதரவாளர்களும், அமெரிக்க வேலைகளை பறிக்கிறது என்று எதிர்ப்பாளர்களும் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர்.

இந்தச் சர்ச்சை, அமெரிக்காவில் இந்திய திறமைகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றன என்பது குறித்த ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது.