ஓபன் ஏஐ நிறுவனத்தில் நடந்த மோசடியை கண்டுபிடித்த இந்தியர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் ஏஐ மோசடி செய்வதாக பகிரங்கமாக புகார் தெரிவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுதீர் பாலாஜி என்பவர் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 26.
உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தினை மேம்படுத்தி புதிய பரிமாற்ற முறைகளை உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய சுதீர் பாலாஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தகவல் பரிமாற்ற முறைகளை உருவாக்குவதில் செயல்பட்டார்.
கடந்த அக்டோபர் மாதம் அவர் இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியதாகவும், ஓபன் ஏஐ மிகப்பெரிய மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் அவரது பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தன்னுடைய வீட்டில் சுதீர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடலில் காயங்கள் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக பகிரங்கமாக புகார் தெரிவித்த சில மாதங்களிலேயே சுதீர் பாலாஜி தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.