2200 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்..!

By Bala Siva

Published:

இந்திய பங்குச் சந்தை இன்று மிக மோசமாக சரிந்ததில் முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் 17 லட்சம் கோடியை இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய பங்குச் சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்தது என்பதும் வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை 3 சதவீதம் வரை சென்செக்ஸ், 2.6% வரை நிஃப்டி சரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் ஏராளமான நிறுவனங்களின் பங்கு வீழ்ச்சி அடைந்ததாகவும் முதலீட்டாளர்களுக்கு 17 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று 3.30 மணிக்கு வணிக நேரம் முடிவடைந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2222 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி   662 புள்ளிகள் சரிந்துள்ளது. இது மொத்த வணிகத்தில் சுமார் 2.6 சதவீதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டதாகவும் இதனால் இந்திய பங்குச்சந்தை மட்டும் இன்றி உலக அளவில் பங்கு சந்தை காட்டும் சரிவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆசியாவை பொருத்தவரை இந்தியா, தென்கொரியா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலும் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து உள்ளது. ஜப்பானில் 12 சதவீதம் பங்கு சந்தை சரிந்துள்ளதாகவும் ஆசியாவில் இது மோசமான சரிவு என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே இன்று ஏற்றம் கண்டது என்றும் மீதமுள்ள 28 நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் 6 சதவீதம் வரை சரிந்தது என்றும் அதானி நிறுவனங்களின் பங்குகள், டாட்டா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ பங்குகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது .

நிஃப்டி பட்டியில் உள்ள 50 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களில் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் இருந்ததாகவும் 46 நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமாக சரிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க பொருளாதார அசாதாரண நிலை காரணமாகத்தான் இன்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்துள்ளதாகவும்,  3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் வேலையின்மை மிக மோசமாக உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல்  பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.