முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கூறி, சாம்சங் நிறுவனத்திற்கு இந்திய அரசு ரூ.5,169 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இது, சமீபத்திய ஆண்டுகளில் இந்திய அரசு விதித்த மிகப்பெரிய வரி அபராதம் ஆகும்.
சாம்சங், தனது நெட்வொர்க் பிரிவின் மூலம் தொலைத்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. 2023ஆம் ஆண்டு, அது தனது இறக்குமதி வகைப்படுத்தலை தவறாக பயன்படுத்தி 10% அல்லது 20% வரிகளை தவிர்த்ததாக இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த பொருட்களை சாம்சங், இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு விற்றது. இந்த நிலையில் ஜனவரி 8-ஆம் தேதி இந்திய சுங்கத்துறை வெளியிட்ட உத்தரவின் படி, சாம்சங் இந்திய சட்டங்களை மீறியது என்றும், அதிகாரிகளுக்கு தவறான ஆவணங்களை வழங்கியது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“சாம்சங் அனைத்து பிசினஸ் நெறிமுறைகள் மற்றும் தொழில்துறை நெறிமுறைகளை மீறி, அதிக லாபம் ஈட்ட அரசு வருவாயை ஏமாற்ற முயன்றது” என்று சுங்கத்துறை குற்றஞ்சாட்டியது. இதனால் சாம்சங் $520 மில்லியன் வரியையும், 100% அபராதத்தையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், $81 மில்லியன் அபராதம் அதன் ஏழு உயரதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதில் சங் பீம் ஹாங் (நெட்வொர்க் பிரிவு துணைத் தலைவர்), டாங் வான் சூ (நிதி தலைமை அதிகாரி), ஷீதல் ஜெயின் (நிதி மேலாளர்) மற்றும் நிகில் அகர்வால் (மறைமுக வரி மேலாளர்) உள்ளிட்டோர் உள்ளனர்.
இதுகுறித்து சாம்சங் விளக்கமளித்த, “இது பொருட்களின் வகைப்பாட்டில் உள்ள ஒரு விளக்கம் சார்ந்த பிரச்சினை, இந்திய சட்டங்களை பின்பற்றுகிறோம். எங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் சட்டமுறை நடவடிக்கைகளை பரிசீலிக்கிறோம்” என்றும் கூறியுள்ளது.