வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 200 ரன்களை கடந்ததன் மூலம் மிக முக்கியமான ஒரு பட்டியலில் பல மைல் தூரம் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதிக் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய அதன்படி ஆடிய வங்கதேச அணியால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியவில்லை. 140 ரன்கள் கூட தொட முடியாமல் திணறிய வங்கதேச அணி 127 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி 12 வது ஓவருக்குள்ளாகவே இலக்கை எளிதாக எட்டிப் பிடிக்க, அவர்கள் தொடரிலும் முன்னிலை வகித்திருந்தனர். அடுத்த இரண்டு போட்டிகளிலாவது மிகப்பெரிய தாக்கத்தை வங்கதேச அணியும் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தால் மீண்டும் அப்படியே தான் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
இரு அணிகளும் சமீபத்தில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் மோதியது. இந்த முறை டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது. இந்திய அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தும் என நினைத்து அவர்கள் எடுத்த முடிவு ஆரம்பத்தில் சிறப்பாக தான் இருந்தது.
41 ரன்களை இந்திய அணி சேர்ப்பதற்குள் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டை வங்கதேச அணியினர் வீழ்த்தி இருந்தனர். இதனால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுமா என்ற சந்தேகமும் எழுந்த நிலையில் தான் ரிங்கு சிங் மற்றும் நித்திஷ் ரெட்டி ஆகியோர் இணைந்து இந்திய அணியின் போக்கையே மாற்றி இருந்தனர்.
அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடி காட்டி ரன்னை இருவரும் உயர்த்த, 14 ஓவர்களுக்குள்ளேயே 150 ரன்களை இந்திய அணி கடந்திருந்தது. நித்திஷ் ரெட்டி 34 பந்துகளில் ஏழு சிக்ஸர்களுடன் 74 ரன்கள் எடுக்க அவருடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த ரிங்கு சிங், 53 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ரியன் பராக் ஆகிய இருவரும் கிடைத்த குறுகிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு ரன் சேர்க்க இந்திய அணி 200 ரன்களை கடந்திருந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அவர்கள் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்திருந்தனர்.
இதன் காரணமாக தான் இந்திய அணி டி20 சர்வதேச அரங்கில் தங்களின் ஆதிக்கத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி இதுவரை 36 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இந்த பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, அதனை 23 முறை தான் கடந்துள்ளது.
இதனால், இந்திய அணியின் இந்த சாதனையை நிச்சயம் நெருங்குவது என்பதே பல அணிகளுக்கும் சவாலான விஷயம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.