சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளும் ஒருவரையொருவர் போட்டியாளர்களாக அல்லாமல், பங்காளிகளாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பயணம், இருதரப்பு உறவுகளை சீரமைக்கும் ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது.
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின்போது, வாங் யி, இரு நாடுகளும் பரஸ்பர இணக்கம் மற்றும் நலன் என்ற கொள்கையை பேண தயாராக இருப்பதாக கூறினார். உலகளாவிய அளவில், தன்னிச்சையான வர்த்தக நடைமுறைகள் மற்றும் தடைகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும்போது, உலகின் இரண்டு மிகப்பெரிய வளர்ந்து வரும் நாடுகள் என்ற முறையில், இந்தியா மற்றும் சீனா முக்கிய சக்திகளாச் செயல்பட்டு மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்தியா மற்றும் சீனா, பொறுப்புணர்வுடன், ஒன்றுபட்டால் பலம் என்ற கொள்கையை பின்பற்றினால் உலக அளவில் முக்கியத்தும் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும், இந்தியா மற்றும் சீனா ஒருவரையொருவர் போட்டியாளர்களாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்க்காமல், பங்காளிகளாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதன்பின் இன்று வாங் யி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்த 2வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. லடாக் எல்லை பகுதியில் 2020ல் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு இரு நாடுகளும் உறவுகளை சீரமைக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்து ஏற்பாடுகள் குறித்த சமீபத்திய உடன்பாடுகள் சில பதட்டங்களைத் தணித்துள்ளன. இது பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு வழி வகுத்துள்ளது. இந்த மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், வாங் யியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
