பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான அழுத்தங்களையும் மீறி, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இது இந்தியாவின் ராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை முழுமையாக நிறுத்திவிட்டதால், ரஷ்யா கச்சா எண்ணெயை குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கியது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி, இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள் மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நிரந்தரமான நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்கொள்ளும் விதமாக, இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்குப் பதிலடி வரி விதிக்க உள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலாக, அந்நாட்டிற்கு அளிக்கப்பட்ட சில சலுகைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இதனால், அந்த பொருட்கள் மற்றும் அதன் மீதான வரி விகிதத்தை தீர்மானிக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் அழுத்தங்களை மீறி, தனது நாட்டின் நலன்களுக்காக எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ததுடன், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சரியான பதிலடியை வழங்கியது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
