வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறான தகவலை கொடுத்தாலோ, வருமானத்தை குறைத்து காண்பித்தால் அல்லது வேறு முறைகேடு செய்தால் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதிக்கு வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் 1000 முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருமானத்தை குறைத்து காட்டி முறைகேடு செய்தால் வரி விதிப்பு தொகையை போல் 100 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் வரியைப்புத்தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிதி ஆண்டும் கட்ட வேண்டிய வருமான வரியை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்தவில்லை என்றால் ஒரு சதவீதம் வட்டி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சொத்து வாங்கும் போது அதன் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ஒரு சதவீதம் மூலதன வரி அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் இல்லை எனில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிடிஎஸ் தொகையை அரசு கணக்கில் கண்டிப்பாக கட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அபராதத்துடன் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் அதன் பிறகு வருமான வரி தாக்கல் செய்ய முடியாது என்றும் சரியான தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் ரீபண்ட் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
வருமான வரி குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் வங்கிகளில் கடன் வாங்குவது, லோன் எடுப்பது, பாஸ்போர்ட் பெறுவது, வெளிநாட்டிற்கு பயணம் செல்வது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஜூலை 31ஆம் தேதிக்குள் அனைவரும் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.