ஆன்லைன் மூலம் எளிமையாக வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? இதோ முழு விவரங்கள்

  வருமான வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருந்து வரும் நிலையில், பலர் தங்களுடைய ஆடிட்டர் மூலம் வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வது முந்தைய…

July 31 is the last date for filing income tax return

 

வருமான வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருந்து வரும் நிலையில், பலர் தங்களுடைய ஆடிட்டர் மூலம் வருமான வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வருமான வரி தாக்கல் செய்வது முந்தைய காலங்களை போல் கடினமாக இல்லாமல் மிகவும் எளிமையாகிவிட்டது. குறிப்பாக ஆன்லைனில் வருமான வரி போர்ட்டல் மூலம் சுலபமாக இதை முடிக்கலாம். ஆனால், இ-வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் சில முக்கியமான ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம்.

அவற்றில் பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள், படிவம் 16, நன்கொடைக்கு வழங்கப்பட்ட ரசீதுகள், பங்குச்சந்தை பற்றிய விவரங்கள், மருத்துவ மற்றும் வாழ்நாள் காப்பீட்டு ரசீதுகள், வங்கி கணக்கில் PAN இணைப்புடன் தொடர்புடைய தகவல்கள், ஆதார் விவரத்தில் இருக்கும் மொபைல் எண் மற்றும் வட்டி வருவாய் சான்றிதழ்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். அதன்பின் படிப்படியாக வருமான வரியை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வது எப்படி என பார்ப்போம்.

1. அதிகாரப்பூர்வ வருமான வரி இ-தாக்கல் இணையதளத்திற்கு சென்று, ‘Login’ ஐ அழுத்தி, உங்கள் PAN எண்ணை User ID ஆகக் கொடுத்து, ‘Continue’ என்பதை கிளிக் செய்யவும். பின்னர் பாதுகாப்பு செய்தி பெட்டியை டிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து ‘Continue’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

2. ‘e-File’ மெனுவில் ‘Income Tax Returns’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘File Income Tax Return’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

3. ‘Assessment Year’ என்பதை தேர்வு செய்து எந்த வருடத்தின் வருமான வரி தாக்கல் என்பதை தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக, ஆன்லைன் வழியில்தான் தாக்கல் செய்ய இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

4. Individual, HUF அல்லது Others என்ற மூன்று ஆப்ஷன்களில் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து ‘Continue’ கிளிக் செய்யவும்.

5.  உங்கள் வரி நிலையைப் பொருத்து சரியான ITR படிவத்தை தேர்வு செய்யவும்.

6.  ITR தாக்கல் செய்வதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்யவும்.

7. PAN, ஆதார், பெயர், பிறந்த தேதி, தொடர்பு விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் ஆகியவை முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்கவும். அனைத்து பொருந்தக்கூடிய வருமானம், கழிவுகள், விலக்குகள் அனைத்தையும் முறையாக பதிவு செய்யவும். உங்கள் பணியிட மற்றும் வங்கி விவரங்களை சரிபார்த்து, செலுத்த வேண்டிய வரி இருப்பின் அதனை செலுத்தவும்.

வருமான வரி தாக்கல் செய்த பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் அதனை பார்வையிட்டு நீங்கள் சரியாக வருமான வரி தாக்கல் செய்து விட்டீர்கள் என்பதை உங்களுக்கு மொபைல் மூலம் தெரிவிப்பார்கள். அதன்பின் வருமான வரித்துறை உங்களது வருமான வரி தாக்கலுக்கான அனைத்து தகவல்களும் சரியாக ஏற்கப்பட்டு விட்டால் உங்கள் வருமான வரி தாக்கல் பணிகள் முடிவடைந்தது என்று உங்களுக்கு அறிவிப்பு வெளிவரும். அது மட்டும் இன்றி டிடிஎஸ் பிடிக்கப்பட்டு இருந்தால் வருமான வரி தாக்கல் பணிகள் முடிவடைந்த உடன் வருமான வரி போக மீதம் உள்ள தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் வருமான வரி தாக்கல் செய்வதில் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் ஆடிட்டர் மூலம் வருமான வரிகளை தாக்கல் செய்து கொள்ளலாம். உங்களது வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட் மற்றும் அவர் கேட்கும் சில விவரங்களை அளித்துவிட்டால் அவர் உங்களது வருமான வரி தாக்குதலை பதிவு செய்துவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவார் என்பதும், அதற்கு நீங்கள் ஆடிட்டருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது,