மெல்ல விடை கொடு மனமே.. மயிலாடுதுறை பள்ளியில் ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய பெற்றோர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தலைமையாசிரியரின் பணியிடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நடத்திய பாசப் போராட்டம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்குதலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு சேர்ந்திருக்கிறார்.

அப்போது, வெறும் 20 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்த ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றார்களாம் தற்போது 100 மாணவர்கள் வரை சேர்க்கையை உயர்த்தி உள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு (புதன்கிழமை) முன்னர் தலைமை ஆசிரியர் முருகையன் திடீரென பணி மாறுதலாகி சென்றிருக்கிறார். இதை அறிந்த மாணவர்கள் பள்ளியிலும் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக கூடி, அவரே மீண்டும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்ற வேண்டும் எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த மணல்மேடு காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து போராடிய மாணவர்களை அமைதிப்படுத்தி வகுப்பிற்குள் அனுப்பி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து, நேற்று வட்டார கல்வி அலுவலர் ஜானகி மற்றும் ஆசியர்கள், பணி மாறுதலாகி சென்ற தலைமை ஆசிரியர் முருகையனை பள்ளிக்கு அழைத்து வந்தார்கள்

அப்போது பள்ளிக்கு வந்த முருகையன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும், தனது கழுத்து எலும்புப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதை காட்டி உள்ளார். உடல்நிலை சரியில்லாதது மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பணிமாறுதலாகிச் செல்வதாக கூறியுள்ளார். உடல்நிலை சரியானவுடன் அடுத்த ஆண்டு மீண்டும் பள்ளிக்கு வந்து பணியாற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். இதையடுத்த காலில் விழுந்து சில பெற்றோர்கள், அவரை மீண்டும் பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது, தலைமை ஆசிரியர் ஓராண்டுவரை அருகில் உள்ள பள்ளிக்குச் செல்வதாகவும், அடுத்த ஆண்டு நிச்சயம் இதே பள்ளிக்கு அவரை நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர் உறுதி அளித்தார். அவருக்கு பிரியா விடையளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.