இந்த வாரம் தீபாவளி பண்டிகை வாரமாக அமைந்திருக்க இந்தியா முழுவதும் தற்போது வரையில் நிறைய இடங்களில் இதன் கொண்டாட்டங்கள் இருந்து தான் வருகிறது. பல இடங்களில் நான்கு நாட்கள் விடுமுறையாகவும் இந்த வார இறுதி அமைந்திருந்ததால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றும் திருவிழா தீபாவளி நாளை வெகு விமரிசையாக கொண்டாடியிருந்தனர்.
ஒரு பக்கம் புத்தாடை உடுத்து, இனிப்புகள் தயார் செய்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளி நாளை நினைவுமிக்க தருணமாகவும் பலர் மாற்றி வந்த நிலையில் இன்னும் சில இடங்களில் வேடிக்கையான சம்பவங்களும் அரங்கேறி இணையதளங்களிலும் கவனம் பெற்று வந்தது. அப்படி ஒரு சம்பவம் தொடர்பான செய்தியையும், வீடியோவையும் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
வெளி ஊர்களில் படிப்பவர்களும், வேலை பார்ப்பவர்களும் ஏதாவது சில காரணங்களால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தாங்கள் வசித்து வரும் இடத்திலேயே இதனை கொண்டாடும் சூழல் உருவாகி இருந்தது. ஊருக்கு செல்ல முடியவில்லை என்று கவலைப்படாமல் தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அந்த நாளை மிக சிறப்பாகவும் பலர் கொண்டாடி இருந்தனர்.
அப்படி இருக்கையில் தான் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் உள்ள ஐஐடி (IIT Dhanbad) கல்லூரி மாணவர்கள் தங்களது கல்லூரி விடுதியில் ஒரு வேடிக்கையான சம்பவத்தை தீபாவளி பண்டிகைக்கு மத்தியில் செய்து காட்டி உள்ளனர். பொதுவாக பட்டாசு விடும் போது சிலர் கையில் வைத்து கொளுத்தியோ அல்லது ஏதாவது ஆபத்து உருவாகி விடக்கூடாது என்ற நோக்கில் மிக கவனமாக தள்ளி நின்றும் அதனை நேர்த்தியாக விடுவார்கள்.
ஆனால் இந்த ஐஐடி கல்லூரி மாணவர்களோ தங்களின் விடுதிக்கு நடுவே இருந்த டென்னிஸ் கோர்ட்டில் ஒரு பழைய குப்பைத் தொட்டியை தலைகீழாக வைத்து அதற்குள் பட்டாசை கொளுத்தி வைக்கின்றனர். அடுத்த சில நொடிகளிலேயே உள்ளே இருந்த பட்டாசு வெடித்ததும் அந்த குப்பைத் தொட்டி கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடி வரைக்கும் பறந்து கீழே திரும்பி வந்தது. மேலும் பயங்கர சத்தத்துடன் குப்பைத் தொட்டி வானை நோக்கி பறக்க, விடுதியில் இருந்த பல மாணவர்களும் ஆர்ப்பரித்து அதனை கொண்டாடி இருந்தனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வரும் நிலையில் பலரும் நாசாவிலிருந்து அழைப்பு வந்துள்ளது என்றும், ராக்கெட் மிஷின் தோல்வி அடைந்து விட்டது என்றும் வேடிக்கையான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் இப்படி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அங்கு இருக்கும் மாணவர்கள் யாருக்காவது ஆபத்து நிகழக் கூடும் என்றும் கவனக்குறைவை குறிப்பிட்டு எச்சரித்தும் வருகின்றனர்.