பழம்பெரும் மூத்த பிரபல நாடக கலைஞரும் தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகருமான எம் ஆர் ராதா அவர்களின் மகள் தான் ராதிகா சரத்குமார். 1960 மற்றும் 70களில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இணையாக போற்றப்பட்டவர் எம் ஆர் ராதா என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை, திரைப்பட இயக்குனர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.
ராதிகா சரத்குமார் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பணியாற்றியுள்ளார். சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பிரபல தொடர்களை தயாரித்து நடித்தவர் ராதிகா சரத்குமார். 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் ராதிகா தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை என்ற திரைப்படத்தை தயாரித்தவர் ராதிகா சரத்குமார். இது இந்திரா காந்தி விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த ராதிகா யாரும் செய்யத் துணியாத சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். ரேடன் மீடியா என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய ராதிகா சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, வாணி ராணி, சித்தி 2 போன்ற தொடர்களை தயாரித்து அதில் நடித்தார்.
ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்த சித்தி தொடர் 2000 கள் காலகட்டத்தில் மிகப் பிரபலமாக ஓடிய தொடராகும். திரைப்படங்களை விட சின்னத்திரை தொடர்களின் மூலமாக பெண்கள் மத்தியில் பிரபலமானார் ராதிகா. தனது நடிப்பிற்காகவும் தயாரிப்பிற்காகவும் தேசிய திரைப்பட விருது, 6 ஃபிலிம் ஃபேர் விருதுகள், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு சினிமா எக்ஸ்பிரஸ் விருது, ஒரு நந்தி விருது ஆகியவற்றை வென்றுள்ளார் ராதிகா சரத்குமார்.
சமீபத்தில் இந்திய சினிமா முழுவதும் மலையாள திரையுலகை பற்றிய பேசிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஹேமா கமிட்டி குழு மலையாளத் திரையுலகத்தின் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது தான் காரணம். இது சம்பந்தமாக மோகன்லால் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்தது மேலும் இந்த நிலைமையை தீவிரமடைய செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ் திரை உலகில் இந்த மாதிரி பிரச்சினைகள் இருக்கிறதா என கேள்விகள் இந்த பக்கம் திரும்பியுள்ளது. இது சம்பந்தமாக ஒரு பேட்டியில் பேசிய ராதிகா சரத்குமார் ஒரு நடிகை ஒரு படத்திற்கு கமிட் ஆகி நடிக்க வருகிறார்கள் என்றால் அந்த நடிகைக்கான முழு பொறுப்பு தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு எந்த வசதியானாலும் செய்து கொடுப்பது பிரச்சினைகள் வந்தால் என்னவென்று தீர்ப்பது எல்லாம் தயாரிப்பாளர்கள் தான். இந்த மாதிரி பிரச்சனைகள் ஒரு நடிகை சந்திக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர்கள் தான் முதலில் வரவேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். என்ன பிரச்சனை என கேட்டு அறிந்து தீர்வு காண வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் ராதிகா சரத்குமார்.