தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு மற்றும் அதன் கூட்டணி நகர்வுகள் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திருமாவளவன் தலைமையிலான விசிக, பாஜக எதிர்ப்பு என்ற தனது பிம்பத்தை முன்னிறுத்தி திமுக கூட்டணியிலேயே ஒட்டிக்கொண்டிருப்பது அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போதைய சூழலில் விசிக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், அவர்களுக்குக் குறைந்தது 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அதில் 15 தொகுதிகளில் அக்கட்சியால் எளிதாக வெற்றி பெற முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணிப்பு தெரிவிக்கின்றனர்.
பாஜக எதிர்ப்பு என்ற வேடத்தை போடுவதை விடுத்து, தலித் மக்களின் அதிகார பகிர்வு மற்றும் கட்சியின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு விசிக முடிவெடுத்தால், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். ஆனால், சித்தாந்த ரீதியான மோதல் என்ற பெயரில் தொடர்ந்து திமுகவின் பிம்பத்திற்குள் அடைக்கலமாவது விசிகவைத் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு இயக்கமாக வளரவிடாமல் தடுத்துவருகிறது. ஒரு பக்கம் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் வேகம் இருந்தாலும், மறுபக்கம் மிகக்குறைந்த தொகுதிகளுக்காக திமுகவிடம் கையேந்தும் நிலை விசிக தொண்டர்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.
திமுக கூட்டணியில் ஐந்து அல்லது ஆறு தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு “அடிமையாக” இருப்பதை விட, தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிக தொகுதிகளைக் கோரக்கூடிய ஒரு கூட்டணிக்கு விசிக செல்ல வேண்டும் என்ற குரல்கள் வலுக்கின்றன. விசிகவின் வாக்கு வங்கி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அப்பாற்பட்டு மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில், அதற்குரிய அங்கீகாரம் திமுக கூட்டணியில் வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
இதேவேளையில், அதிமுகவின் பக்கம் விசிக திரும்புமா என்ற எதிர்பார்ப்பும் ஒரு காலத்தில் நிலவியது. அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்த விசிகவை அழைத்ததா என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லையென்றாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து ஒரு மென்மையான அணுகுமுறை எப்போதும் இருந்து வருகிறது. பாஜக இல்லாத அதிமுக கூட்டணியில் இணைவது விசிகவிற்குச் சித்தாந்த ரீதியாகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், திமுகவின் பிடியில் இருந்து விலகி ஒரு சுதந்திரமான முடிவை எடுப்பதில் திருமாவளவனுக்கு இருக்கும் தயக்கமே அக்கட்சியை இக்கட்டான நிலையில் வைத்திருக்கிறது.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்ற தத்துவத்தை விசிக உணர வேண்டிய தருணம் இது. பாஜக எதிர்ப்பு என்ற ஒரே புள்ளியில் சுழன்று கொண்டிருப்பதால், மற்ற அனைத்து வாய்ப்புகளையும் விசிக இழந்து வருகிறது. ஒருவேளை என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் மற்றும் தமிழகத்தில் அதிக சட்டமன்ற தொகுதிகள் என பெரிய அளவிலான ஆதாயங்களை விசிக அறுவடை செய்ய முடியும். திருமாவளவனுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலை மட்டும் முன்னெடுப்பது, அக்கட்சியைக் காலப்போக்கில் ஒரு சிறிய இயக்கமாகவே மாற்றிவிடும் அபாயம் உள்ளது.
இறுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது பயணத்தை தொடரப் போகும் பாதை எது என்பதை திருமாவளவன் தான் தீர்மானிக்க வேண்டும். அடிமையாக இருந்து ஐந்து சீட்டுகளை பெறுவதா அல்லது அதிகாரப் பலத்துடன் 20 சீட்டுகளை பெற்று தனது தொண்டர்களுக்கு பெருமை சேர்ப்பதா என்பது அவரது கையில் தான் உள்ளது. தமிழக அரசியலில் ஒரு கிங் மேக்கராக மாற வேண்டிய விசிக, காலத்தின் கட்டாயத்தை புரிந்து கொண்டு செயல்படாவிட்டால், மற்ற கட்சிகளின் நிழலில் மறைந்து போக வேண்டியது தான் மிஞ்சும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
