ஐஸ்க்ரீம் சாப்பிட்டால் எலும்புகள் பாதிக்கும்.. டிடர்ஜெண்ட் சோப்பு பவுடர் கலப்படமா?

  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் சோப்பு பவுடர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதையடுத்து, இந்த விதமான ஐஸ்கிரீமை சாப்பிட்டால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

icecream

 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் சோப்பு பவுடர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதையடுத்து, இந்த விதமான ஐஸ்கிரீமை சாப்பிட்டால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை மக்கள் அதிக ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை மேற்கொண்ட ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கேரளாவின் பல ஐஸ்கிரீம் கடைகளில் சோதனை செய்யப்பட்டபோது, பல கடைகளில் ஐஸ்கிரீமில் டிடர்ஜென்ட் பவுடர் அதாவது, சோப்பு பவுடர் பயன்படுத்தப்பட்டதாகவும், குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கலப்பட ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை சாப்பிட்டால் எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், பல ஐஸ்கிரீம் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சுத்தமில்லாத சூழலில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதாகவும், ஐஸ்கிரீமில் பால் சேர்ப்பதற்குப் பதிலாக சோப்புத்தூள், யூரியா மற்றும் மாவுப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட செயற்கைப் பால் பயன்படுத்தப்படுவதாகவும், இயற்கைச் சர்க்கரைக்கு பதிலாக ‘சாக்கரின்’ போன்ற வேதியியல் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிட தகுதியற்றவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கலப்பட ஐஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களை சாப்பிடும் முன்பு அவை தரமானதா என்பதை பரிசோதித்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.