பயிற்சி ஐஏஎஸ் பூஜா மீது பல்வேறு புகார்கள் வெளிவந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி மேல் மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
புனேவில் பயிற்சி ஐஏஎஸ் பூஜா என்பவர் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக பயிற்சி பெற்ற போது அவர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கிய பூஜாவின் ஐஏஎஸ் தேர்வு குறித்து ஆய்வு செய்த போது பல மோசடிகளில் அவர் சிக்கி உள்ளது தெரிய வந்தது. குறிப்பாக பார்வை குறைபாடு உள்ளவர் என்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் அவர் சமர்ப்பித்தது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அவர் இட ஒதுக்கீடு பெற்றிருந்தார்.
அது மட்டுமின்றி அவரது தந்தையின் வருமானமும் குறைவாக காட்டப்பட்டிருந்தது. அவரது தந்தை 40 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது குறிப்பிட்டு இருந்த நிலையில் பூஜா தனது தந்தையின் வருமானத்தை குறைவாக காட்டியதிலும் முறைகேடு நடந்துள்ளது.
மேலும் யுபிஎஸ்சி தேர்வில் பெற்றோர் பெயர் அடையாள அட்டையில் மாற்றப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதை அடுத்து துணை மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடந்த செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அவர் தனது வீட்டிலும் இல்லை என்பதால் அவர் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் தனது பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டனர் என்று கூறி அதன் மூலம் கிடைக்கும் சலுகைகளும் அவர் பெற்றுள்ளதாக தற்போது புதிதாக தெரியவந்துள்ளது. ஆனால் உண்மையில் அவரது பெற்றோர் விவாகரத்து செய்யவில்லை.
பூஜாவின் மோசடிகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ளதை அடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பூஜாவின் தாயார் விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.