பிரான்டெக் நிறுவனத்தின் உரிமையாளர் அபாஸ் சுல்தானியா தனது சமூக வலைத்தளத்தில், தன்னுடைய நிறுவனத்தில் ஒரு இளம் பெண் வேலை கேட்டு வந்ததாகவும், அவருக்கு தான் வேலை கொடுத்த நிலையில் 72 மணி நேரத்தில் அவர் ராஜினாமா செய்துவிட்டு சென்றதாகவும், அவர் போகும்போது “இந்த அலுவலக சூழ்நிலையில் என்னால் வேலை பார்க்க முடியாது” என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் மூன்றே மாதத்தில் அதே இளம்பெண் தன்னுடைய நிறுவனத்திற்கு வேலை கேட்டு வந்ததுதான் ஆச்சரியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு இளம்பெண் என்னிடம் மனிதவள நிர்வாகியாக வேலைக்கு வந்தபோது, அவரது திறமை எனக்கு பிடித்ததை அடுத்து அவருக்கு வேலை கொடுத்தேன். ஆனால், ‘மிகுந்த கட்டுப்பாடு உள்ள ஒரு அலுவலகத்தில் என்னால் வேலை பார்க்க முடியாது. நான் ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்திய அனுபவம் உள்ளவர். எனவே, இந்த நிறுவனத்தில் என்னால் வேலை பார்க்க முடியாது’ என்று 72 மணி நேரத்தில் அவர் வேலையை ராஜினாமா செய்தார்.
எங்களுக்கு 23 அலுவலகங்கள், 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று. ஆனால், எங்கள் நிறுவனத்தில் ஒரு கட்டுப்பாடு உண்டு. கட்டுப்பாட்டுடன் கூடிய கட்டமைப்பு ஒன்று இல்லை என்றால், ஒரு நிறுவனத்தை நடத்த முடியாது. கட்டுப்பாடு இல்லாமல் நடக்கும் நிறுவனங்களின் சக்கரம் கண்டிப்பாக கழன்று விழுந்துவிடும்” என்று தெரிவித்த சுல்தானியா, கூடுதல் நேரம் வேலை பார்ப்பது, வேலை பார்த்த நேரத்துக்கு தகுந்தவாறு வெகுமதி அளிப்பது, பயன்படுத்தாத விடுமுறையை பணமாக மாற்றுவது உள்ளிட்ட வசதிகள் எங்களிடம் இருந்தாலும், ஒரு வகையான கட்டமைப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
“இந்த கட்டமைப்பிலிருந்து என்னால் மாட்டிக்கொள்ள முடியாது” என்றும் “நான் சுதந்திரமாக இருந்தேன்” என்றும் வெளியேறிய அந்தப் பெண் வேறு ஒரு நிறுவனத்தில் மூன்று மாதங்கள் வேலை செய்தார். ஆனால், அந்த நிறுவனத்தில் அவரது அனுபவம் கசப்பாக இருந்தது. “அந்த நிறுவனத்தில் முழு சுதந்திரம் இருந்தது. ஆனால், அந்த நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு தெளிவு இல்லை. எந்த பக்கம் போக வேண்டும் என்ற திசை கூட தெரியவில்லை. நான் சுதந்திரமாக இருந்தேன், ஆனால் என்னுடைய தனித்தன்மையை தொலைத்துவிட்டேன்” என்று கூறிய அதே இளம்பெண் மீண்டும் சுல்தானியாவிடம் வேலை கேட்டு வந்ததாகவும், “அந்த நிறுவனத்தில் நான் சுதந்திரமாக இருந்தேன், ஆனால் என் அடையாளத்தை இழந்துவிட்டேன்” என்று கூறிய அவரது ஒரே ஒரு வார்த்தைக்காக அவரை மீண்டும் வேலையில் சேர்த்து கொண்டதாகவும் சுல்தானியா தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள இளம் தலைமுறையினர் கட்டுப்பாடுகளுடன் கூடிய வேலையை விரும்புவதில்லை என்றும், ஆனால் இப்படி ஒரு வேலையில் செய்ய அவர்கள் பழகிவிட்டால் அவர்களுக்கு ஒரு தனித்தன்மையான திறமை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வேலையில் கட்டுப்பாடு என்ற கலாச்சாரம் மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். மொத்தத்தில், சுதந்திரத்திற்கும் கட்டமைப்புக்கும் இடையிலான போரில் குழப்பம் இல்லாமல் ஒரு தெளிவை கொண்டு வர வேண்டும் என்றும், இன்றைய இளைஞர்கள் அதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
