தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், முதல்முறையாக ஒரு தேசிய ஊடக குழுவை சந்தித்து பேசியுள்ளார். என்டிடிவி குழுமம் சென்னையில் நடத்திய நிகழ்ச்சியை தொடர்ந்து, அதன் முதன்மை ஆசிரியர் ராகுல் கன்வால் மற்றும் அரசியல் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடினர். திரையில் நாம் காணும் சூப்பர் ஸ்டாரை தாண்டி, ஒரு தீவிரமான அரசியல்வாதியாக விஜய்யின் மற்றொரு முகத்தை இந்த சந்திப்பு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அரசியல் களத்தில் விஜய் மிகத் தெளிவான முடிவோடும், அசைக்க முடியாத உறுதியோடும் இருப்பதாக ராகுல் கன்வால் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை விஜய் பொதுவெளியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காததால், அவர் ஒரு தயக்கமான அல்லது நம்பிக்கையற்ற பேட்டியாளராக இருப்பார் என்று ஊடக வட்டாரங்களில் ஒரு பிம்பம் இருந்தது. ஆனால், சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் கேட்கப்பட்ட அனைத்து கடினமான கேள்விகளுக்கும் விஜய் மிகவும் நிதானமாகவும், அதே சமயம் உறுதியாகவும் பதிலளித்துள்ளார். குறிப்பாக, “நான் ஒரு கிங்மேக்கர் கிடையாது; நான் வெற்றி பெறுவேன்” என்று அவர் கூறியது, அவர் வெறும் ஓட்டு பிரிப்பவராக இல்லாமல், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கிலேயே களம் இறங்கியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
விஜய் தனது 33 ஆண்டுகால புகழ்பெற்ற சினிமா வாழ்க்கையை முழுமையாக துறந்துவிட்டு, முழுநேர அரசியலில் இறங்கியிருப்பதை இந்த சந்திப்பு ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது. தனது அரசியல் வருகையால் படங்கள் குறிவைக்கப்படுவதையும், தயாரிப்பாளர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் அவர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், 41 உயிர்களைப் பலிவாங்கிய கரூர் துயரச் சம்பவம் தன்னை இன்னும் பாதிப்பதாகவும், அதிலிருந்து மீள தனக்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டதாகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தனது அரசியல் செயல்பாடுகளுக்கான முன்மாதிரிகளாக பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், தற்போதைய சூழலில் மற்ற கட்சிகளுடன் கைக்கோர்க்கும் எண்ணம் தமக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். “மக்கள் வெள்ளம் எனக்கு பின்னால் இருக்கும்போது, நான் ஏன் கூட்டணியை பற்றி யோசிக்க வேண்டும்?” என்ற அவரது எதிர்கேள்வி, அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. வரும் மூன்று மாதங்களில் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக அவர் கருதுகிறார். நீண்ட கால திட்டங்களுடன் அரசியலுக்கு வந்துள்ள அவர், தேர்தலுக்கு பிந்தைய பேரம் பேசுதல்களில் தமக்கு உடன்பாடில்லை என்பதையும் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
வசுதா வேணுகோபால் விஜய்யின் பிரச்சார உத்திகள் குறித்து கூறுகையில், விஜய் தனது பரந்து விரிந்த ரசிகர் மன்றங்களை ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தொண்டர் அமைப்பாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் வாரங்களில் விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் பேரணிகள் மற்றும் மாவட்ட வாரியான பயணங்கள் முற்றிலும் புதிய வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விஜய் தன்னை ஒரு ‘எட்டாக்கனியாக’ வைத்திருந்தது அவரது தனிப்பட்ட விருப்பம் அல்ல, மாறாக அது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் மௌனம் என்பதும், சரியான தருணத்தில் அவர் ஊடகங்களை எதிர்கொள்வார் என்பதும் இச்சந்திப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.
இறுதியாக, விஜய்யின் இந்த நேர்காணல் முயற்சி, அவர் தமிழக அரசியலில் ஒரு ‘பகுதி நேர பயணியாக’ இருக்க போவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. “அனைவரும் விஜய்யை பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் விஜய் இன்னும் பேசவில்லை” என்ற அவரது பிரபலமான வாசகத்திற்கேற்ப, அவர் தனது மௌனத்தை கலைக்கும் போது அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திராவிட கட்சிகளின் பலமான வாக்கு வங்கிகளுக்கு மத்தியில், விஜய்யின் இந்த தனித்துவமான அணுகுமுறை மற்றும் வெற்றி குறித்த பிடிவாதம் 2026 தேர்தல் களத்தை ஒரு மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
