தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் என்பது வெறும் திரையுலக நட்சத்திரத்தின் வரவாக மட்டும் பார்க்கப்படாமல், முப்பது ஆண்டுகாலமாக அடிமட்ட அளவில் கட்டமைக்கப்பட்ட ஒரு வலிமையான இயக்கத்தின் பரிணாமமாகவே அக்கட்சியினரால் முன்வைக்கப்படுகிறது. ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் விஜய்யின் அரசியல் வருகையை சர்ச்சையாகவும், வெறும் ‘ரசிகர் மன்றத்தின் மாற்றமாகவும்’ பார்த்தாலும், தவெக தரப்பு இதனை ‘அன்பால் உருவான கட்டமைப்பு’ என வரையறுக்கிறது. குறிப்பாக, திமுக செட் செய்யும் நரேட்டிவ்களை தகர்த்து, வகுப்புவாரி விகிதாச்சாரம் மற்றும் படித்த இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
கட்சியின் உட்கட்டமைப்பை பொறுத்தவரை, 234 தொகுதிகளுக்கும் பிரச்சார குழுக்கள் அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உயர்கல்வி கற்ற வல்லுநர்களை நியமிப்பது என தவெக ஒரு திட்டமிடப்பட்ட கார்ப்பரேட் பாணியிலான அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. திமுகவை “தீயசக்தி” என வெளிப்படையாக விமர்சிக்கும் விஜய், வாரிசு அரசியலுக்கு மாற்றாக தகுதியுள்ள சாதாரண குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை அதிகார மையங்களுக்கு கொண்டு வருவதே தனது கட்சியின் நோக்கம் என்கிறார். இந்த அணுகுமுறை அடித்தட்டு மக்களிடமும், இளைஞர்களிடமும் எந்த அளவுக்கு ஓட்டுகளாக மாறும் என்பதே 2026 தேர்தலின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
கூட்டணி குறித்த யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவினாலும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பது விஜய் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதாக இருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கும், தவெக எடுக்கும் அரசியல் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சி தரப்பு திட்டவட்டமாக கூறுகிறது. பாஜக, காங்கிரஸ் அல்லது விசிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமையலாம் என ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டாலும், தற்போது வரை தவெக தனது தனித்துவத்தை பேணவே விரும்புகிறது. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற விஜய்யின் முழக்கம், சமமான முக்கியத்துவம் அளிக்கும் கூட்டணிக்கே அவர் முன்னுரிமை அளிப்பார் என்பதை கோடிட்டு காட்டுகிறது.
சமீபத்தில் கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு விஜய் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே விஜய் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் ஓடின. இருப்பினும், தவெக தரப்பு இதனை சட்டத்தின் கடமை என எளிமையாக கடந்து செல்கிறது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த விசாரணையை பொய் பரப்புரைகளுடன் இணைக்க வேண்டாம் எனவும், விஜய் ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாகவே செயல்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ரசிகர்கள் ஓட்டுகளாக மாறுவார்களா என்ற கேள்விக்கு, அக்கட்சி தரப்பு மிக உறுதியான பதிலை கொண்டுள்ளது. 30 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொண்டர்கள், மக்களின் மனங்களில் ஏற்கனவே இடம்பிடித்துவிட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் தவெக தொடர்பான பதிவுகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வியூவர்ஷிப் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் அதீத வரவேற்பு, தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சிக்கு சவாலாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்களிடம் நிலவும் அன்பே ஓட்டுகளாக மாறி, விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும் என்ற நம்பிக்கையில் தவெக தொண்டர்கள் களப்பணியாற்றி வருகின்றனர்.
இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமாக இல்லாமல், தமிழக அரசியலில் ஒரு புதிய தலைமுறைக்கான தொடக்கப்புள்ளியாக தெரிகிறது. திமுக செட் செய்யும் அரசியல் வட்டத்திற்குள் சிக்காமல், தங்களுக்கென ஒரு தனி பாதையைத் தவெக உருவாக்கி வருகிறது. ஊடகங்களின் புறக்கணிப்புகளையும், எதிர்த்தரப்பினரின் பொய் நரேட்டிவ்களையும் தாண்டி, மக்களின் “அன்பு” ஒன்றையே மூலதனமாகக் கொண்டு களம் இறங்கியுள்ள விஜய், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
