தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய ‘கேம் சேஞ்சர்’ ஆக இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. குறிப்பாக, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் வருகை, பல ஆண்டுகளாக நிலவி வந்த கூட்டணி சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. இதற்கு முன் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று முழக்கமிட்டு வந்த விசிக போன்ற கட்சிகள், விஜய்யின் அதிரடி அறிவிப்புகளுக்கு பிறகு தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஆனால், நீண்டகாலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது ஒரு புதிய சிந்தனை ஓட்டம் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய், தங்களது கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கத் தயார் என்று ஆஃபர் வழங்குவது, காங்கிரஸின் ஒரு பிரிவினரை தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குள் தற்போது இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஒரு தரப்பினர், கடந்த 58 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ் கட்சி, இனியும் திமுகவின் ‘பி’ டீமாகவே நீடிக்க கூடாது என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக விஜய்யுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். அதேசமயம், மற்றொரு தரப்பினர் இந்தியா கூட்டணியின் ஒருமைப்பாட்டை கருத்தில் கொண்டு திமுகவுடனான உறவை தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். காங்கிரஸ் தலைமை டெல்லியில் 42 மூத்த தலைவர்களை அழைத்து தனித்தனியாக கருத்துக்களை கேட்டுள்ளதும், ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசியுள்ளதும் இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
காங்கிரஸ் கட்சி திமுகவிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் வலுவானவை. 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நிகராக சட்டமன்ற தொகுதிகள், அடுத்த அமைச்சரவையில் குறைந்தபட்சம் மூன்று அமைச்சரவை இடங்கள் மற்றும் ராஜ்யசபா சீட்டுகள் என பல நிபந்தனைகளை அவர்கள் விதித்துள்ளனர். இந்த டிமாண்டுகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தரப்பிலிருந்து இதுவரை வெளிப்படையான பதில் கிடைக்கவில்லை. தொகுதி பங்கீட்டு குழு கூட இன்னும் அமைக்கப்படாத நிலையில், காங்கிரஸின் பொறுமை சோதிக்கப்பட்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்பதே தற்போதைய அரசியல் யதார்த்தம். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்குள் இருந்த கட்சிகளே சட்டமன்ற தேர்தலில் மோதி கொண்டதை நாம் பார்த்திருக்கிறோம். தமிழகத்திலும் அதே போன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது. பொது எதிரியான பாஜகவை வீழ்த்த நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்த கட்சிகள், மாநில அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் முரண்படுவது இயல்பானதே. திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் குறைகளுக்கு கூட்டணி கட்சிகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால், தங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை நியாயமானதாகவே பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம், தமிழக வெற்றி கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சின்னம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே அது பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்துவிட்டது. ‘விசில் ப்ளோயர்’ என்பது ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்களைக் குறிக்கும் என்பதால், இந்த சின்னம் விஜய்யின் அரசியல் நோக்கத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. மகாபலிபுரம் கூட்டத்தில் விஜய் விசில் அடித்தது அவரது தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னம் மட்டுமே வெற்றியை தராது என்றாலும், அது ஒரு கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான எளிய கருவியாக செயல்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விஜய்யின் வருகை என்பது வெறும் ரசிகர் கூட்டத்தை சார்ந்தது மட்டுமல்ல, அது ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நகர்வாக மாறி வருகிறது. ஆரம்பத்தில் விஜய்யின் சின்னம் மற்றும் உறுப்பினர் சேர்க்கையை கேலி செய்தவர்கள் கூட, இப்போது அவரது களப்பணியை கண்டு வியக்கின்றனர். 2026 தேர்தலில் விஜய் ஒரு ‘கிங் மேக்கராக’ இருப்பாரா அல்லது நேரடி போட்டியில் இறங்கி ‘கிங்’ ஆக மாறுவாரா என்பது காங்கிரஸின் முடிவை பொறுத்தே அமையும். காங்கிரஸ் தலைமை தனது எதிர்கால வளர்ச்சியை முன்னிறுத்தி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு, தமிழகத்தின் 50 ஆண்டுகால திராவிட அரசியலின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
