கோவை: பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. இந்நிலையில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா விளக்கம் அளித்து உள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் கடந்த வாரம் பரவலாக மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் வழக்கத்தை விட காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை உக்கடத்தைச் சேர்ந்த வாலிபர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதையடுத்து டெங்கு தடுப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிப்பது எப்படி?, முன்னெச்சரிக்கையாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
டெங்கு அறிகுறிகள் என்ன?
கோவையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஏடிஸ் வகையை சேர்ந்த கொசுக்கள் கடிப்பதால் பரவும் வைரஸ் நோய் தான் டெங்கு. இந்த கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் வலம் வரக்கூடியவையாகும். கொசு கடித்து 5 முதல் 6 நாட்களில் காய்சலுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். காய்ச்சல், தலைவலி, கண் வலி போன்றவை முதற்கட்ட அறிகுறிகள். தசை மற்றும் மூட்டு வலி, பசியின்மை, சுவையை உணர முடியாமல்போதல், தட்டம்மைபோல மார்பு மற்றும் மூட்டுகள் அருகே சரும பிரச்சினைகள், வாந்தி வரலாம்.
இதில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று கூறினார்.