நாகர்கோவில்: ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்குவதற்கு தபால்துறை அடையாள அட்டை பெறலாம். தபால் துறை அடையாள அடடையை எப்படி பெறுவது என்று கன்னியாகுமரி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தபால அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம்பெற்று இருக்கும். தபால் அடையாள அட்டையினைப் பொதுமக்கள் அனைத்துத் தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ரூ.20 செலுத்தி அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். முகவரிகளை தபால் அலுவலகர்கள் நேரில் வந்து சரிபார்த்து அடையாள அட்டை வழங்குவார்கள்.
கன்னியாகுமரி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “தபால்துறை சார்பில் பொதுமக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தபால்துறை அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இந்த அடையாள அட்டையினை பொதுமக்கள் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பெற முடியும். இதற்கான விண்ணப்ப படிவத்தினை ரூ.20 செலுத்தி பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள முகவரியை உறுதிசெய்யும் ஏதேனும் ஒரு சான்றின் நகல் (விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை) ஆகியவற்றை இணைத்து தலைமை தபால் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய தபால்காரர் மூலமாக முகவரி சரிபார்க்கப்பட்டு தபால்துறை அடையாள அட்டை வழங்கப்படும்.
தபால்துறை அடையாள அட்டைக்கான கட்டணம் ரூ.250. பதிவுத்தபால் மூலம் பெற்றுக்கொள்ள ரூ.22 கூடுதலாக செலுத்த வேண்டும். தபால் அலுவலக அடையாள அட்டை வழங்கப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆதார் அட்டையில் முகவரி திருத்தம், மாற்றம் செய்யவும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் இதனை ஒரு சான்றாகப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.