நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி

By Keerthana

Published:

சென்னை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்‌ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் வேண்டுகோள் வைத்திருந்தார். இந்நிலையில் கஸ்தூரிக்கு ஜாமீன் தர சென்னை போலீஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இதையடுத்து கஸ்தூரிக்கு ஜாமீன் தந்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிராமணர் உட்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவம்பர் 3-ம் தேதி இந்து மக்கள் கட்சி சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை கூறினார்.. இதனால் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.அவருக்கு சம்மன் அளிக்க சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த சூழலில், முன்ஜாமீன் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள பப்பலக்குண்டா பகுதியில் படத் தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணனின் பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அங்கிருந்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர். கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, கஸ்தூரி தூக்கமின்றி தவித்து வருவதாகவும், சரியாக சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் சொல்லப்பபடுகிறது. ஆட்டிசம் பாதித்த மகனை நினைத்து பரிதவிப்புடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி சுவாமிநாதன். இவர், சக்‌ஷம் (மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு) என்ற அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவராக இருக்கிறார் . இவர் நேற்று வெளியிட்ட பதிவில், “அவதூறு வழக்கில் கைதாகியுள்ள நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக ஒரு கோரிக்கை. நடிகை கஸ்தூரிக்கு எதிரான குற்றவியல் வழக்கு குறித்து நான் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதேசமயம் அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார் என்றும் அவர் ஒரு தனி ஆளாக அக்குழந்தையை போராடி வளர்த்து வருகிறார் என்றும் அறிந்துகொண்டேன். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால்.

நானும் கஸ்தூரியைப் போல ஒரு சிறப்பு அம்மாதான். (Special Mother). எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான். இதன் அடிப்படையில் எனக்கும் என்னைப்போன்ற ஏனைய தாய்மார்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கத் தோன்றுகிறது. கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் நீதிமன்றங்கள் அவரது குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு அணுக வேண்டுமென எதிர்பார்க்கிறோம். ஒரு மாற்றுத் திறனாளியின் தாயாக கஸ்தூரிக்கு என் உடன் நிற்றலை தார்மீக கடமையென நினைத்து இதை நான் பதிவிடுகிறேன்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் பலரும் கஸ்தூரிக்கு ஜாமீன் தர போலீஸ் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதால் கஸ்தூரிக்கு ஜாமீன் தர போலீஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் புதிய வழக்குளில் அவரை கைது செய்வதையும் ஒத்திவைத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று கோர்டில் வழக்கு வந்த போது, கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கஸ்தூரி ஜாமீன் புழல் சிறையில் இருந்து இன்று அல்லது நாளை காலையில் வெளியே வர உள்ளார்,