தற்போது, கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வீட்டுக் கடன் வழங்கி வருகின்றன. ஆனால், வீட்டுக்கடன் பெறுவதற்காக, விண்ணப்பத்தில் பொய் தகவல் அளித்தால், சிக்கலில் மாட்ட வேண்டிய நிலை உருவாகலாம்.
வீட்டுக் கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் விசாரணையில் கிடைக்கும் தகவல்கள் பொருந்த வேண்டும். அவை பொருந்தாவிட்டால், கடன் நிராகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
உதாரணமாக ஒருவர் ஐந்து ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார் என்று குறிப்பிட்டு, உண்மையில் ஒரு ஆண்டுதான் பணியாற்றியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றி, வீட்டு கடன் நிராகரிக்கப்படும்.
அதேபோல் விண்ணப்பதாரரின் சம்பள விவரங்கள், வங்கி கணக்கில் உள்ள பதிவுகளுடன் பொருந்த வேண்டும். மேலும் கிரெடிட் ஸ்கோர் 650க்கு கீழ் இருந்தால், வீட்டு கடன் பெறுவது மிகவும் கடினம். கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.
மேலும் தனிநபர் கடன், கார் கடன், அல்லது கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை வாங்கி இருந்தால், வீட்டுக்கடன் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். அதனால், புதிய வீட்டுக் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன், இந்த கடன்களை முடித்துக் கொள்வது நல்லது.
இது போன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, வீட்டுக்கடன் பெறுவதில் சிக்கல்களை குறைக்க முடியும்.