தற்போதைய இன்டர்நெட் உலகத்தில் ஆன்லைன் மூலம் பல்வேறு வசதிகள் வந்து கொண்டிருந்தாலும், ஆன்லைன் மூலம் செய்யப்படும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சைபர் குற்றம் செய்பவர்கள் பல்வேறு விதமாக யோசித்து, புதுப்புது ஐடியாக்கள் மூலம் பணத்தை மோசடி செய்வதால் பயனர்கள் பலர் பணத்தை ஏமாந்து வருகின்றனர்.
உதாரணமாக, புனேவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவர் ஹாட்ஸ்டார் ஆப்பில் சப்ஸ்கிரிப்ஷன் செய்தார். அவர் விளம்பரம் இல்லாமல் பார்க்கும் பிளானை சப்ஸ்கிரைப் செய்த நிலையில், தொடர்ந்து விளம்பர தொந்தரவுகள் வந்துகொண்டிருந்தன.
இதனை அடுத்து, ஹாட்ஸ்டார் கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்ட அவர் “பணத்தை திருப்பி கொடுங்கள்” என்று கேட்டுள்ளார். உடனே, “உங்களுடைய வங்கி கணக்கை அனுப்புங்கள், பணத்தை செலுத்துகிறோம்” என்று சொல்லியுள்ளனர். அதை நம்பிய அந்த பெண், தனது வங்கி கணக்கை கொடுத்துள்ளார். உடனே, அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் 17 லட்சம் பணம் காலியாகிவிட்டது. இதன் பிறகு தான் கஸ்டமர் எண் போலியானது என்று தெரியவந்துள்ளது. ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எந்தவொரு செயலியிலும் பணத்தை திருப்பி கொடுக்கும் ஆப்சன் இல்லை என்பது அந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கவில்லை.
மேலும் கஸ்டமர் கேர் எண்களை கூகுளில் தேடக் கூடாது என்றும், எந்த நிறுவனத்தின் கஸ்டமர் கேர் எண் வேண்டுமோ, அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தான் தேட வேண்டும் என்றும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல், பலர் வித்தியாசமான முறைகளில் பணத்தை இழந்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வழங்கும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று கூறி, “கேஒய்சி விவரங்களை அளிக்க வேண்டும்” எனக் கூறி லிங்கை அனுப்புவார்கள். அந்த லிங்கை தெரியாமல் கிளிக் செய்தால், வங்கி கணக்கில் உள்ள அத்தனை பணமும் ஏமாற்றப்படலாம்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1750 கோடி ரூபாய் பணம் சைபர் குற்றங்கள் மூலம் இழக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது சரியான முறைகளை கடைப்பிடித்து, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.