தேர்தல் களத்தில் ஒரு அரசியல் தலைவர் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அது பெரும்பாலும் ஒரு பெரிய அனுதாப அலையாக மாறி, சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் குவிக்கும் என்பது நாம் அறிந்ததே. இது பலமுறை நடைமுறையில் நிகழ்ந்துள்ளது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விஷயத்தில் இது உண்மையிலேயே நடந்தது. அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டியே அ.தி.மு.க. தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருக்கு உண்மையாகவே உடல்நலக் குறைவு இருந்தது என்பதும், அவர் வெற்றிக்காக நாடகமாடவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
அதேபோல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனுதாப அலை வீசியது. தமிழகத்தில் அதிமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தது.
ஆனால், எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தியின் இந்த உதாரணத்தை எடுத்துக்கொண்டு, பல அரசியல்வாதிகள் தேர்தல் சமயத்தில் திடீரென விபத்து ஏற்படுவது போலவோ அல்லது காயம் அடைவது போலவோ நாடகம் ஆடி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மம்தா பானர்ஜி: ஒருமுறை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குக் கால் உடைந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில், அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அரசியல் மேடையில் ஏற்றியது பெரும் கூத்தானது. ஒரு முதலமைச்சருக்கு காலில் அடிபட்டது என்றால், உடனடியாக அரசு நிர்வாகமோ அல்லது அவரது கட்சி நிர்வாகிகளோ செய்ய வேண்டியது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான். ஆனால், காயத்துடன் அவரை மேடை ஏற்றியது “நாடகத்தின் உச்சம்” என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பிரசாந்த் கிஷோர்: ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் சமயத்தில் விபத்து ஏற்பட்டது. அதேபோல், பிரசாந்த் கிஷோர் காரில் இருந்து இறங்கும்போது இன்னொரு கார் அவர் மீது மோதியதால் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த காயத்துடனும் அவர் மருத்துவமனைக்கு செல்லாமல், மேடை ஏறி, மேடையில் சில நிமிடங்கள் வலிப்பதுபோல் சில நாடகங்கள் நடத்தி அனுதாப அலையை பெற முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
டொனால்ட் டிரம்ப்: இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யும்போது, அவருடைய காது அருகே சுடப்பட்டதாக கூறப்பட்டது. ஏன் சுடுபவன் நெஞ்சை நோக்கி சுடவில்லை என்று அப்போதே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அனுதாப அலைதான் அவர் வெற்றிபெறக் காரணம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.
வாக்காளர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
இந்தச் சம்பவங்களின் பின்னணியில், இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் வரவிருக்கும் தேர்தல்களில், சில முக்கிய அரசியல்வாதிகள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற அல்லது விபத்துகள் ஏற்படுவது போன்ற நாடகங்களை ஆடலாம் என்றும், அந்த அனுதாப அலையில் வாக்குகளை பெற முயற்சிக்கலாம் என்றும் அரசியல் வல்லுநர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், காட்சிகள் ஆகியவற்றை பகுத்தறிவுடன் அணுக வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், உண்மையை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் வலியுறுத்துகின்றனர். அனுதாப அலையைத் தாண்டி, ஒரு தலைவரின் செயல்பாடு, கொள்கைகள், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
