மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி போரில் நேரடியாக குதித்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ள நிலையில், தெற்கு இஸ்ரேல் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ செங்கடல் பகுதியில் தங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், கடுமையான பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் “எங்கள் கைகள் எப்போதும் தாக்குதலில் இருக்கும்” என்றும் அவர்கள் விடுத்துள்ள மிரட்டல் போரின் போக்கை மாற்றியமைத்துள்ளது.
இந்த போரின் ஒரு பகுதியாக இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பான இரண்டு இடங்களை தாக்கி அழித்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஈரான் அதிகாரிகளோ இஸ்ரேலிய படைகள் வேண்டுமென்றே குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு வரும் காட்சிகள் போரின் கோரத்தை வெளிப்படுத்துகின்றன. மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற வார்த்தைகளால் கூட அங்கு நடக்கும் கொடூரங்களை விவரிக்க முடியாது என்று ஈரான் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்த போர் பல புதிய முனைகளில் விரிவடைந்து வருவது அமைதி முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
செங்கடல் பகுதியில் ஹூதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், உலக நாடுகளின் கவனம் தற்போது கடல்வழி வர்த்தகத்தின் பக்கம் திரும்பியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெயை வெளியே கொண்டு செல்வதற்கான முக்கியமான மாற்று பாதையாக செங்கடல் விளங்குவதால், அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறும் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாட்டை உருவாக்கும். மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் வணிக கப்பல்களை தாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தங்கள் இலக்குகள் நிறைவேறும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும் என்று அவர்கள் பிடிவாதமாக இருப்பதால், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
மற்றொரு புறம், உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போவதாக ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. எதிரிகளின் நிலைகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று ஈரான் வீரர்கள் உறுதி பூண்டுள்ளனர். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி முக்கிய பங்கு வகிப்பதால், அதன் முடக்கம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பாதையைத் திறந்து விடுவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் அழுத்தங்கள் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த போர்ச்சூழலின் தாக்கம் தற்போது அமெரிக்ப் பங்குச்சந்தையான வால் ஸ்ட்ரீட்டிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. போரின் தொடக்கத்திற்கு பிறகு அமெரிக்க சந்தை அதன் மிக மோசமான வாரத்தை சந்தித்துள்ளது, குறிப்பாக நாஸ்டாக் குறியீடு வீழ்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் இந்த சூழல் குறித்து நம்பிக்கையுடன் பேசுகையில், போர் முடிவுக்கு வரும்போது பொருளாதாரம் “ராக்கெட் வேகத்தில்” முன்னேறும் என்று தெரிவித்துள்ளார். சில வாரங்களிலேயே இலக்குகளை எட்டிவிட முடியும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினாலும், கள யதார்த்தம் அதற்கு மாறாகவே உள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் இன்னும் எட்டாக்கனியாகவே நீடிக்கின்றன. ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தைகள் பற்றி பேசப்பட்டாலும், மறுபுறம் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வருகிறது. இஸ்ரேல், ஈரான், ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அமெரிக்கா என பல தரப்புகள் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளதால், இது ஒரு பிராந்திய போராக மாறும் அபாயம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் சர்வதேச சமூகம் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே மத்திய கிழக்கின் அமைதி மற்றும் உலக பொருளாதாரத்தின் எதிர்காலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
