பிரபல நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். கடந்த 2018-ம் ஆண்டில் தனது முக நூல் பக்கத்தில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பத்திரிக்கையாளர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சங்கத்தினை நாடினார்.
அதன்படி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை குற்றப்பிரிவு காவல் துறையில் சங்கச் செயலாளர் மிதார் மொய்தீன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் புரிதல் போன்ற பிரிவுகளின் கீழ் கடந்த 2019-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உஷார் மக்களே..! தமிழகத்தினைத் தாக்கும் புதிய நோய்..யாருக்கெல்லாம் வரும் தெரியுமா?
இப்புகாரினை எம்.பி., எம்.எல்.ஏ.,-க்கள் மீதான புகாரினை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து குற்றத்தினை உறுதி செய்து எஸ்.வி.சேகருக்கு ஒருமாத சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பினை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் எஸ்.வி.சேகர் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. புகாரினை விசாரித்த நீதிபதி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை உறுதி செய்தார்.