சென்னை: ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு ஒரு லட்ச ரூபாயை செலுத்தவும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் காசாகிராண்ட் கட்டுமான நிறுவனத்திடம் தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை புதுப்பித்து கட்டிக் கொடுப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை கட்டுக் கொடுக்கவில்லையாம். இதனால் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய விதிகளின் படி வீடு கட்ட கொடுக்கப்பட்ட தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க கோரி ரியல் எஸ்டேட் மூறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீட்டுள்ளார்.
அதில் கட்டுமான நிறைவு சான்றை தேதியிட்டு கட்டுமான நிறுவனம் அளித்தும், கட்டிடம் கட்டுவதற்கான மீத தொகை மனுதாரர் செலுத்தவில்லை என்பதால் முழு தொகையை திரும்ப கேட்க உரிமை இல்லை என ரியல் எஸ்டேட் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்பரின் பொது அதிகாரம் பெற்ற அவரது சகோதரர் விஷ்ணுகுமார் பாலசுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதி நிஷாபானு, கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் முரளிகுமரன், ஆஜராகி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளை கட்டுமான நிறுவனம் மீறி செயல்ப்பட்டுள்ளதால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒப்பந்தபடி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை கட்டி ஒப்படைக்காத நிலையில் விதிகளின் படி கட்டுமான நிறுவனம் மனுதாரரிடம் இருந்து வீடு கட்ட பெற்ற தொகையை திரும்ப பெற உரிமை உள்ளதாக உத்தரவட்டனர்.
மேலும் கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு 2 கோடியே 2 லட்சத்து 80 ஆயிரத்து 259 ரூபாயை வருடத்திற்கு 10.25% வட்டியுடன் திரும்ப கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும், வழக்கு செலவாக ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.