மெடிக்கல் இன்சூரன்ஸ் என்பதே ஆத்திர அவசரத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் என்று தான் போடப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மெடிக்கல் கிளைம் செய்யும் போது பல்வேறு சிக்கலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது லிங்க்ட் இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த அனுபம் குப்தா, சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தரும் அனுபவத்தை தனது LinkedIn பதிவில் பகிர்ந்துள்ளார். இவர் சுகாதார காப்பீட்டுக்கான (health insurance) ஒரு க்ளைம் செய்திருந்தார். இதையடுத்து, முன்னறிவிப்பு இன்றி அகமதாபாத்தை சேர்ந்த “Ace Investigation Agency” என்ற நிறுவனம் சார்ந்த இருவர், அவரது வீட்டுக்கு நேரில் வந்துள்ளனர்.
ஆவணச் சரிபார்ப்பு என்ற பெயரில் அவர்கள், அவரது வீட்டுக்குள் நுழைவதற்காக கோரிக்கை வைத்தனர். hospitalization ஆவணங்களை மீண்டும் கோரினர், ஆனால் குப்தா ஏற்கனவே அதை வழங்கியிருந்தார். அவரது வீட்டில் இருந்த கூடுதல் நகல்களை அளித்தபோதிலும், அடுத்து அவர்கள் கேட்ட விவரங்கள் தனிமனித உரிமையை மீறும் வகையில் இருந்தது.
அவர்கள், குப்தா குறிப்பிட்ட தேதியில் அதே நேரத்தில் நர்சிங் ஹோமில் இருந்தது நிரூபிக்க, Google Timeline தரவை கேட்டனர். குப்தா அதை வழங்க மறுத்தார். மேலும் புகைப்படங்கள், வீடியோக்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் என தேவையில்லாத கேள்விகள் தொடர்ந்தன. மேலும், இன்னொரு பிரதிநிதியுடன் தொலைபேசியில் பேசுமாறும் கூறப்பட்டது.
ஒரு மணி நேரம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி, தனிப்பட்ட விவரங்களை கோரியபின், அவர்கள் வழங்க மறுக்கப்பட்ட தகவல்களுக்கு ஒப்புதல் தரும் வகையில் கையெழுத்து வாங்க முயன்றனர். ஆனால் குப்தா கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
குப்தா கூறுகையில், தனது காப்பீட்டு நிறுவனத்தின் இந்த செயல் தன்னை மிகுந்த மனஅழுத்தம், சோர்வினை ஆழ்த்தியது என தெரிவித்தார். இந்த மாதிரி நேரில் வருவது வழக்கமா என கேட்டபோது, அந்த விசாரணையாளர்கள், “எல்லா காப்பீட்டு நிறுவனங்களும் இதே மாதிரியான பரிசோதனைகளை நடத்துகின்றன” என கூறினர்.
குப்தா நிறுவனம் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இந்த தாக்குதலை போன்ற செயல்கள் இந்தத் துறையில் பரவலாக இருக்கக்கூடிய செயல்பாடுகளாக இருக்கலாம் என அவர் சந்தேகிக்கிறார். சுகாதார காப்பீட்டுக் க்ளைம்களில் ஆதரவுக்கு பதிலாக, கண்காணிக்கப்படுவது போல் உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.