இயக்குனர் கேட்டும்.. பாட்டுக்கு நடுவே சிரிக்க மறுத்த பாடகி.. ஆனாலும் கில்லாடியா ரஹ்மான் செஞ்ச வேலை.. படையப்பா ஹிட் பாடலின் பின்னணி..

By Ajith V

Published:

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கடந்த 30 ஆண்டுகளுக்குள் ஹாலிவுட் வரையிலும் மிகப்பெரிய அளவில் உச்சத்தை தனது இசை மூலம் தொட்டவர் தான் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்த ரஹ்மான் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருது வாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார். ஒரு குறிப்பிட்ட ஜானர் என இல்லாமல் எப்படிப்பட்ட கதை பின்னணியாக இருந்தாலும் அதற்கேற்ப இசையமைத்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.

தமிழில் கிடைத்த அறிமுகத்தின் மூலம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகி நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் தனி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வருகிறார். பிரபல இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள் என யாராக இருந்தாலும் அவர்களுக்காக முழு ஈடுபாடுடன் பணிபுரியும் ரஹ்மான், பல இயக்குனர்களுடன் இணைந்து நிறைய ஹிட் ஆல்பங்களும் கொடுத்துள்ளார்.

. ஆர். ரஹ்மான் ஹிட் காம்போ

மணிரத்னம், ஷங்கர் என பல இயக்குநர்களுக்காக நிறைய திரைப்படங்கள் இசையமைத்துள்ள ரஹ்மான், கே. எஸ். ரவிக்குமாருடனும் முத்து, படையப்பா, தெனாலி, வரலாறு, லிங்கா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் ஒவ்வொரு திரைப்படங்களில் வரும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இன்று வரையிலும் பேவரைட்டாக இருந்து வருகிறது.
rajini and ks ravikumar in padayappa

இதில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அந்த காலத்திலேயே சக்கை போடு போட்டவை. அப்படி ஒரு சூழலில் இந்த திரைப்படத்தில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி படத்தின் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்த கருத்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஹ்மானின் புத்திசாலித்தனம்

பிரபல பாடகி ஹரிணி மற்றும் பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் “சுத்தி சுத்தி வந்தீக” என்ற பாடலை படையப்பா திரைப்படத்திற்காக பாடி இருந்தனர். இந்த பாடலின் பதிவின் போது நடந்த சம்பவத்தைப் பற்றி கே.எஸ். ரவிக்குமார் பேசுகையில், “ஹரிணியை நாங்கள் அந்த பாடலில் ஒரு இடத்தில் சிரிக்க சொல்லி கேட்டிருந்தோம். ஆனால் அவரோ சிரிக்காமல் வெட்கப்பட்டது போல முடியாது என சொல்லிக் கொண்டிருந்தார்.
suthi suthi vandheega

அந்த சமயத்தில் அங்கே நாங்கள் பேசியது அனைத்துமே மைக்கில் பதிவு செய்யப்பட, ஹரிணி வெட்கப்பட்டு சிரிக்கும் இடத்தை மட்டும் சரியாக கட் செய்து அந்த பாடலில் ஏ ஆர் ரஹ்மான் சேர்த்து விட்டார். நாங்கள் சொன்னது போல ஹரிணி சிரிக்கவில்லை என்றாலும் அவர் வெட்கப்பட்டு சிணுங்கியதை அந்த பாடலில் அருமையாக ரஹ்மான் பயன்படுத்தி இருந்தார். இது போன்ற விஷயங்களை செய்வதில் அவர் மிகப்பெரிய கில்லாடி” என்றும் கேஸ் ரவிக்குமார் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.