தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் வெளுத்து வாங்கிகிறது. இதனிடையே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும் ஃபெஞ்சல் புயலாக மாறி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது. இதனால் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பட தமிழக மாவட்டங்கள், மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதில் விழுப்புரம் மாவட்டம் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரை கிராமங்கள் அனைத்திலும் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் பெரும்பாலான பள்ளிகளில் நீர் புகுந்தது. அப்பகுதிகளில் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமைச்சர்கள் தலைமையில் மீட்புப் படையினர் தொடர்ந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கிட உத்தரவிட்டார்.
சந்திரனின் சாபத்தை நீக்கிய கிருஷ்ணர்…! உடுப்பி பெயர் வர என்ன காரணம்னு தெரியுமா?
மேலும் மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல இயலா நிலை ஏற்பட்டுள்ளதால் அரையாண்டுத் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. வெள்ள நீரில் மாணவர்களின் பாட புத்தகங்களும் மூழ்கியதால் அவர்களால் படிக்க முடியா நிலையும் ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வினை தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுமட்டுமன்றி பாட நூல்கள் மற்றும் நோட்டுக்களை இழந்த மாணவர்களுக்கு புதிய நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே டிசம்பர் இரண்டாவது வாரத்தில் அரையாண்டுத் தேர்வுகள் துவங்கி டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.