கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் H1B விசா வைத்திருக்கும் நிலையில், அவர்கள் ஒன்று அமெரிக்காவிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து புதிய குடியேற்றக் கொள்கைகளை அறிவித்ததன் காரணமாக H1B விசா வைத்திருக்கும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் பெரும் குழப்பத்தை எதிர்கொள்கின்றனர்.
மைக்ரோசாப்ட், ஆப்பிள், மெட்டா, கூகுள் போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் H1B விசா கொண்ட ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்துள்ளன. ஏனெனில், நாட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் மிகப் பெரும்பான்மையாக இருப்பதோடு, அவர்களை அடுத்து சீனர்கள் மற்றும் கனேடியர்கள் இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து பணிபுரியலாம், ஆனால் தாய்நாட்டுக்கு சென்றால் மீண்டும் அமெரிக்கா வர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலர் இந்தியாவுக்கு வந்து, தற்போது மீண்டும் அமெரிக்கா செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குழப்பமான நிலை ஊழியர்களின் செயல்திறனை பாதிக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பதால், அவர்களது மனநிலை குழப்பமாக உள்ளது. மேலும், அவர்கள் எங்கு சென்றாலும் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த புதிய விசா நெறிமுறைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.