கூகுள் மேப்ஸ் வழிகாட்டுதலால் ஏற்கனவே சில விபத்துகள் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதைப் பயன்படுத்தி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காரில் இருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நொய்டா பகுதியில் உள்ள ஒருவர், தனது காரை ஜிபிஎஸ் கருவி மூலம் ஓட்டிக்கொண்டு சென்றபோது, அவரது வாகனம் 30 அடி ஆழமுள்ள கால்வாயில் விழுந்துள்ளது. இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விசாரணையில் உயிரிழந்த நபர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் என்பதும் தெரியவந்துள்ளது.
தனது மாருதி சுசுகி காரில் பயணம் செய்தபோது, கூகுள் மேப்ஸ் வழிகாட்டியை நம்பியே அவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழியாக பயணம் செய்து கொண்டிருந்த டெலிவரி ஏஜென்ட் ஒருவர், இந்த கோர விபத்தை நேரில் பார்த்துள்ளார். அவர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை என்பதுடன், உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், திடீரென ஒரு இடத்தில் கால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தால்,அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டியது அவசியம் என்றும், கூகுள் மேப்ஸ் ஒவ்வொரு நாளும் இதை அப்டேட் செய்து கொண்டிருக்க முடியாது என்பதால், அந்தந்த துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.