கூகுளின் செயற்கை நுண்ணறிவு சேவையான ஜெமினியில் பல புதிய அம்சங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கல்வி மற்றும் படைப்பாற்றல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சங்கள், பயனர்களுக்கு புதிய அனுபவத்தைக் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஜெமினி அறிவித்துள்ள முக்கிய அறிவிப்புகள் இதோ:
வழிகாட்டப்பட்ட கற்றல் (Guided Learning):
ஜெமினியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வழிகாட்டப்பட்ட கற்றல்’ அம்சம், ஒரு தனிப்பட்ட ஆசிரியரை போல் செயல்படுகிறது. இது வெறும் உடனடி பதில்களை மட்டும் தராமல், ஒரு கேள்வியை படிப்படியாக பிரித்து அதற்கான விளக்கத்தை எளிதில் நமக்கு விளக்குகிறது. இதன் மூலம், பயனர்கள் தான் விரும்பும் ஒரு விஷயத்தில் உள்ள அடிப்படை கொள்கைகளை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். கூகுள் வெளியிட்டுள்ள ஒரு மாதிரி வீடியோவில் இயற்பியல் தொடர்பான ஒரு வீட்டுப்பாட சந்தேகத்தை எப்படி ஜெமினி படிப்படியாகத் தீர்த்துக்காட்டுகிறது என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
பயிற்சிக் கருவிகள் 2.0 (Study Tools 2.0):
தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ஜெமினி பல புதிய பயிற்சி கருவிகளை வழங்குகிறது. இதன் மூலம், மாணவர்கள் தங்கள் பாட பொருட்களை கொண்டு உடனடியாக ஃபிளாஷ் கார்டுகள், பயிற்சிக் கையேடுகள், மற்றும் ஊடாடும் வினாடி வினாக்களை உருவாக்க முடியும். தெர்மோடைனமிக்ஸ் குறித்த ஒரு பயிற்சி வினாடி வினா இதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான இலவச AI புரோ திட்டம்:
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், இந்த புதிய அம்சங்கள் உட்பட பல மேம்பட்ட பயிற்சி கருவிகளை, ஒரு வருட கால இலவச AI புரோ திட்டத்தின் கீழ் பயன்படுத்தலாம். இந்த சலுகை ஜப்பான், இந்தோனேசியா, கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகை அக்டோபர் 6-ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியாவுக்கு இந்த சலுகை இல்லை என்பது துரதிர்ஷடமே
கதைப்புத்தகம் (Storybook):
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஜெமினியின் புதிய ‘கதைப்புத்தகம்’ அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் மனதில் தோன்றும் எந்தவொரு கதையையும் விவரித்தால் போதும், ஜெமினி அதற்கேற்ற தனிப்பயன் ஓவியங்கள் மற்றும் ஆடியோவுடன் கூடிய 10 பக்க புத்தகத்தை உருவாக்கி தரும். எனவே இனி கதை எழுதுவதற்கும் பெரிய அளவில் யோசிக்கவோம், கை வலிக்க எழுதவோ தேவையில்லை. ஒரு கான்செப்டை கொடுத்தால் ஜெமினி உங்களுக்கு ஒரு கதையை எழுதி கொடுத்துவிடும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
