2026 சட்டமன்றத் தேர்தலின் மிக முக்கியமான புள்ளி குறித்து அரசியல் ஆய்வாளர் திரு. பெருமாள்மணி அவர்கள் பேசும்போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய்யுடன் இணைந்த புகைப்படம் இந்த தேர்தலின் மிக முக்கியமான புள்ளி என திடமாக தெரிவிக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாகத் தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதில் விஜய்யின் அரசியல் வருகை மிக முக்கியமானது என்றும் அவர் கருதுகிறார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி காலத்தில் புதிய சக்திகள் எழுந்தாலும், அவர்களது அரசியல் புரிதல் வேறு; ஆனால், தற்போது களத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் திரை பின்புலம் இல்லாத தலைவர்கள் என்பதால், திரை ஆளுமை கொண்ட ஒரு நபர் அரசியல் களத்தில் நுழைவது தமிழக அரசியலில் ஒரு பெரிய ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்தியுள்ளது என்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோதும் இதே அதிர்ச்சி இருந்தது. ஆனால், அவர் களத்தின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு பின்வாங்கினார். திரை கவர்ச்சி மட்டும் வாக்குச்சாவடியில் வெற்றியை தராது என்பதை ரஜினி உணர்ந்தார். ஆனால், விஜய்யின் நிலை வேறு என்கிறார் பெருமாள்மணி. எந்த தலைவர்களின் காலகட்டத்தில் அரசியல் நடக்கிறது என்பதை பொறுத்துதான் முடிவுகள் அமையும். அரசியலில் வெற்றிபெற, வெறும் கையுடன் வந்து, மக்கள் மீது நம்பிக்கை வைத்து, முடிவு வரும் வரை எந்தவிதமான முன்முடிவுக்கும் வராமல் பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த உறுதிப்பாடு விஜய்க்கு இருப்பதாக கருதுகிறார். அவர் நிதானமாக காத்திருந்து சரியான நிர்வாகிகளை, குறிப்பாக செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்க நபரை சரியான நேரத்தில் இணைத்து கொண்டது, விஜய்யின் நீண்ட கால அரசியல் திட்டத்தை காட்டுவதாக சுட்டிக்காட்டுகிறார்.
அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்று கூறியே புதியவர்கள் வர முடியும். ஏனெனில், 1977 முதல் 2021 வரையிலான 11 தேர்தல்களில், வெற்றி பெற்ற கட்சிக்கு அடுத்த இடத்தில் தோல்வியுற்ற கட்சியே வந்துள்ளது. அதாவது, முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பிக்ஸ் ஆகியுள்ளது. இருப்பினும், அண்ணா காலத்தில் பொதுக்கூட்டங்கள், ஜெயலலிதா – கலைஞர் காலத்தில் தொலைக்காட்சிகள் ஆதிக்கம் செலுத்தியது போல, இப்போது ‘இணைய காலம்’ ஆதிக்கம் செலுத்துகிறது. திரை கவர்ச்சியுடன் வரும் ஒரு நடிகர், இணைய காலத்தின் வீச்சை சாதகமாக்கிக் கொள்கிறார். மேலும், சித்தாந்த அரசியல் பேசியவர்கள் வாக்கு வங்கியாக மாறாத நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் போன்றவர்கள் வெறும் கட்டமைப்புகள் இல்லாமல் ஒன்பது சதவீதம் வரை தனித்து நின்று வாக்குகளை பெற்றிருப்பதும், இந்த இருபெரும் கழகங்களின் ‘கட்டமைப்பு பலம்’ சிதைவதையே காட்டுவதாக கூறுகிறார்.
விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய போக்கு ஏற்பட்டுள்ளது. 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களும் பெண்களும் கூட இப்போது அரசியலை பேச தொடங்கியுள்ளனர். இதற்கு இணையதளத்தின் வீச்சும், புதிய தலைமுறைக்கு அவர் கொண்டு சேர்க்கும் கருத்துகளுமே காரணம். விஜய்யின் அரசியல் விமர்சனங்கள் இனி வெறும் செய்தித்தாள், தொலைக்காட்சி விமர்சனமாக இல்லாமல், கடைசி வாக்காளனையும் சென்று சேரும் வீச்சைபெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இணையத்தின் அல்காரிதமே விஜய்க்கு சாதகமாக செயல்படுகிறது. ஒரு வீடியோவை பார்ப்பவர்களுக்கு, அது தொடர்பான அடுத்தடுத்த வீடியோக்களை இணையம் பரிந்துரை செய்வதன் மூலம் கொள்கை பிரச்சாரமே இல்லாமல் விஜய்யின் அரசியல் பிரசாரம் மக்கள் மத்தியில் சென்று சேருவதாக பெருமாள்மணி கூறுகிறார்.
விஜய், தன்னுடைய பலவீனத்தையே பலமாக மாற்றும் வகையில், பெரிய பிரகடனங்கள் எதுவும் செய்யாமல் மிகவும் நிதானமாக செயல்படுகிறார். மற்ற கட்சிகளை போல அவர் ‘மாற்று’ என்று தன்னை முன்னிறுத்தவில்லை. அவர் குறைவான கால அவகாசத்தில் கூட்டணி விஷயத்திலும், தொகுதிப் பங்கீட்டிலும் தனக்கே உரித்தான ஒரு பாதையில் பயணிப்பார் என்றும், மிகவும் வலிமையான ஒரு கூட்டணி கட்டப்படும் என்றும் நம்புகிறார். மேலும், “நண்பா, நண்பி, நல்லதே நடக்கும்” என்று அவர் விடுக்கும் சைலன்ட் செய்தி, அவர் தன்னுடைய ‘கரிஷ்மா’ மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது. இந்த புதுமையான அணுகுமுறையும், இணையத்தின் துணையும் 2026 தேர்தலை சுவாரஸ்யமான தேர்தலாக மாற்றும் என அரசியல் ஆய்வாளர் பெருமாள்மணி அவர்கள் விரிவாக எடுத்துரைக்கிறார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
