மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தங்க பத்திரம் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கு மூடு விழா செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தங்கப்பத்திரம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் படி குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கத்தை வாங்கலாம் என்றும் 8 ஆண்டு காலம் தான் முதிர்வு காலம் என்றும் தங்க மதிப்பு உயர உயர தங்க பத்திரத்தின் மதிப்பும் உயரும் என்றும் தங்க பத்திரங்களை வங்கியில் வைத்து கடனும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தங்க பத்திரத்திற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வருமானம் கிடைக்கும் என்றும் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்ததால் ஏராளமான மக்கள் இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில் தங்க பத்திரங்களை வெளியிடுவதில் மத்திய அரசு திடீரென நிறுத்த போவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் இந்த திட்டத்தால் ரிசர்வ் வங்கிக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வளவு சுமை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தங்கத்துக்கு பதிலாக தங்க பத்திரங்களை விற்பனை செய்து சிறிய வட்டி கொடுத்து விடலாம் என்றும் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதம் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் ரிசர்வ் வங்கிக்கு மோசமான கடன் சுமை ஏற்படும் என்றும் எனவே விற்பனை செய்யப்பட்ட தங்க பத்திரங்களை கூடுதல் விலை கொடுத்து ரிசர்வ் வங்கியே திரும்ப வாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் பாதுகாப்பான முதலீடு என்று மக்களால் வரவேற்கப்பட்ட தங்க பத்திர திட்டம் நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.