2023 ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் வாங்கி இருந்தால், இன்று அதே ஒரு சவரன் தங்கத்தை விற்றால் ரூ.20,000 லாபம் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எந்த மியூச்சுவல் ஃபண்டிலும், எந்த திட்டத்திலும் இவ்வளவு லாபம் கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.45,000 என இருந்தது. அதன் பின்னர், விலை படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.64,500 ஆகி உள்ளது. எனவே, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீங்கள் ஒரு சவரன் தங்கம் வாங்கி இருந்தால், இன்று கிட்டத்தட்ட ரூ.20,000 லாபம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் எங்கே கெட்ட விஷயங்கள் நடந்தாலும், தங்கத்தின் விலை உயர்வதே வழக்கம். காரணம், தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு என்று இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பலரும் கருதுகின்றனர்.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே, தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம், ரஷ்யா- உக்ரைன் போர் நீடிப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்பட்டது ஆகியவையாகும். இதனால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள், அந்த முதலீட்டை வெளியே எடுத்து, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதுவே தங்கத்தின் விலையை மேலும் உயர்த்துகிறது.
இந்தியாவை பொருத்தவரை, தங்கத்தை அணிகலனாக மட்டும் அல்லாது, முதலீடாகவும் மக்கள் வாங்கி வருகின்றனர். நாளுக்கு நாள், தங்கத்தில் முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கம் என்பது மிக நம்பிக்கையான முதலீடாக பார்க்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது 200 கிராம் தங்கத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டான நேரத்தில், தங்கம் தான் நம்பிக்கையான முதலீடு எனவும், மற்ற எந்த முதலீடும் தங்கம் போல் கை கொடுக்காது எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.