மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் குறைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது என்பது தெரிந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 9 சதவீதம் திடீரென இறக்குமதி வரி குறைந்ததை அடுத்து தங்கம் விலை கிடுகிடு என சரிந்தது.
இன்று காலை ரூபாய்க்கு ஒரு கிராம் தங்கம் 6,825 ரூபாய் என விற்பனையான நிலையில் சற்றுமுன் 6,550 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதே போல் சென்னையில் இன்று காலை 54 ஆயிரத்து 600 ஒரு சவரன் தங்கம் விற்பனையான நிலையில் தற்போது 2200 குறைந்து 52,400 விற்பனையாகி வருகிறது.
ஒரு சில மணி நேரத்தில் தங்கத்தின் விலை 2000 ரூபாய்க்கும் மேல் சரிந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டும் இன்றி இன்னும் விலை சரியும் என்று கூறப்படுவதால் தங்கம் வாங்க இது சரியான நேரம் என்று கூறப்படுகிறது.
அதே போல் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 3500 ஒரு சில மணி நேரங்களில் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.