தங்கத்தை நகையாக வாங்கும் போது ஏற்படும் இரு மடங்கு நஷ்டங்கள்..!

By Bala Siva

Published:

 

சேமிக்கும் நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் நகையாக வாங்க கூடாது என்றும் ஆன்லைனில் டிஜிட்டல் தங்கமாக வாங்குவது தான் லாபம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தங்கத்தை நகையாக வாங்கும்போது 10 கிராம் வாங்கினால், அதற்கு நீங்கள் 12 கிராம் நகைக்கான விலையை தர வேண்டிய நிலை இருக்கும். ஏனென்றால் இரண்டு கிராம் சேதாரம் என்று நகைக்கடைகாரர்கள் சொல்லுவார்கள். அது மட்டுமின்றி செய்கூலி என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுவார்கள்.

எனவே, தங்க நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என சுமார் 15% விதம் வரை தங்கத்தின் விலை விட அதிகமாக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சேதாரம் என்பது நகை செய்யும் போது சிதறும் உலோகம் என்று கூறப்பட்டாலும், இந்த சேதாரத்தின் பெரும் பகுதியை நகை செய்பவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டு விடுவார்கள். ஆனால் அதற்கான பணத்தை மட்டும் வாடிக்கையாளர்களிடம் வாங்கி விடுவார்கள்.

ஆனால் அதே நேரத்தில், தங்கத்தை நாம் விற்பதற்காக கொண்டு போனால், மீண்டும் சேதாரம் என்று ஒரு தொகையை கழித்துக் கொள்வார்கள். எனவே, நகையை வாங்கி விற்பதால் நமக்கு இரு மடங்கு நஷ்டம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தங்கள் நகைகளில் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை கண்டிப்பாக வாங்க கூடாது. நகை வாங்கும்போது கல்லுக்கு எடை கிடையாது என்று சொல்வார்கள், பில் போடும்போது கல்லுக்கு பெரும்பாலான கடைகளில் எடை போட்டு தான் விற்பனை செய்யப்படுகிறது. பத்து ரூபாய், இருபது ரூபாய் மதிப்புள்ள கல்லை பதித்துவிட்டு அதற்கு தங்கத்தின் விலையை கணக்கிட்டு வாங்கிக் கொள்வது பெரும்பாலான கடைகளில் நடந்து வருகிறது.

ஆனால் அதே நேரத்தில், தங்கத்தை விற்க செல்லும்போது கற்களை தனியாக கழட்டி எடுத்து விடுவார்கள். கழற்றி எடுத்து அதன் பின் எவ்வளவு எடை இருக்கிறதோ அதற்கு மட்டுமே பணம் தருவார்கள். எனவே, இது போன்ற இழப்பீடுகளை தவிர்க்க, முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்குபவர்கள் அதை டிஜிட்டல் வழியில் வாங்குவது தான் சிறந்தது.

திருமணம் போன்ற விசேஷத்திற்கு தங்கம் வாங்குவதாக இருந்தால் மட்டுமே, நகைகளாக வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.