இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு கிராம் 12,000 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த காலங்களில் தங்க விலை உயர்வுக்கு பொதுமக்களின் நுகர்வும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியுமே முக்கிய காரணங்களாக இருந்தன. ஆனால், இந்த முறை ஏற்பட்டுள்ள விலை உயர்வு முற்றிலும் மாறுபட்டது. தற்போது பொதுமக்கள் நகைக்கடைகளில் தங்கம் வாங்குவது கணிசமாக குறைந்துள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை இருப்பு வைப்பதாலேயே சர்வதேச சந்தையில் இதன் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சீனா போன்ற நாடுகள் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பத்தை குறைக்கும் நோக்கில் தங்கள் வசம் உள்ள டாலர் கையிருப்பை குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக பல ஆயிரம் டன் தங்கத்தை ரகசியமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் வாங்கி வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதார கொள்கைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பை செயற்கையாக குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவே நாடுகள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதுகின்றன. இதனால், தனிநபர்களின் தேவை குறைந்திருந்தாலும், அரசாங்கங்களின் பெரும் தேவையால் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.
தங்கம் என்பது வீடோ அல்லது பங்குகளை போன்றோ வருமானம் ஈட்டி தரக்கூடிய ஒரு முதலீடு அல்ல. வீட்டிற்கு வாடகை வருவது போலவோ, நிறுவன பங்குகளுக்கு டிவிடெண்ட் வருவது போலவோ தங்கத்திற்கு எந்தவிதமான ஈட்டுதலும் கிடையாது. எதிர்காலத்தில் யாராவது ஒரு நபர் இதைவிட அதிக விலைக்கு தங்கத்தை வாங்குவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வைரத்திற்கு இருந்த மவுசு, இன்று இல்லை என்பதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் தங்கத்திற்கும் ஏதேனும் அறிவியல் மாற்றீடு கண்டுபிடிக்கப்பட்டால், அதன் விலையிலும் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேசமயம், கடந்த ஓராண்டில் தங்கத்தை விட வெள்ளியின் விலை அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. தங்கம் ஒரு முதலீட்டு பொருளாக மட்டுமே பார்க்கப்படும் நிலையில், வெள்ளி என்பது தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக சூரிய ஒளி மின்சக்தித் தகடுகள் , மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வன்பொருட்களின் உற்பத்தியில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது. உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக, வரும் காலங்களில் வெள்ளியின் விலை இன்னும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் தங்கத்தை மட்டும் பார்க்காமல் வெள்ளியையும் ஒரு மாற்றாக கவனிக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் தங்கள் மொத்த பணத்தையும் ஒரே இடத்தில் போடாமல் ‘அசெட் அலகேஷன்’ முறையை பின்பற்றுவது சிறந்தது. உங்களின் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து, 10% முதல் 20% வரையிலான தொகையைத் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யலாம். இதில் பிசிகல் தங்கமாக வாங்கி வைப்பதை விட, கோல்டு இடிஎஃப் அல்லது சாவரின் கோல்டு பாண்ட் போன்ற திட்டங்கள் பாதுகாப்பானவை மற்றும் வரிச்சலுகை கொண்டவை. குறிப்பாக டிஜிட்டல் கோல்டு வாங்குபவர்கள், அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்துவிட்டு முதலீடு செய்வது அவசியம்.
அசெட் அலகேஷன் மற்றும் சுழற்சி முறையை பின்பற்றி, விலை குறைவாக இருக்கும்போது வாங்கி, உச்சத்தில் இருக்கும்போது ஒரு பகுதியை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனமான முதலீட்டு அணுகுமுறையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
