ஃப்ரீஸ் செய்யப்படும் லட்சக்கணக்கான ஜன்தன் அக்கவுண்ட்டுகள்.. என்ன காரணம்?

By Bala Siva

Published:

 

ஏழை எளிய மக்கள் பல்வேறு பலன் பெறுவதற்காக மினிமம் பேலன்ஸ் இல்லாத ஜன்தன் அக்கவுண்டுகள் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதில் உள்ள லட்சக்கணக்கான அக்கவுண்டுகள் ஃப்ரீஸ் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜன் தன் அக்கவுண்டுகள் தொடங்க, ஒரே ஒரு ஆவணமாக ஆதார் அட்டை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆதார் அட்டை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஆதார் அட்டையை புதுப்பிக்காத ஜன் தன் அக்கவுண்ட் நபர்களுக்கு அக்கவுண்டுகள் ஃப்ரீஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகர்ப்புறங்களில் மிக எளிமையாக கேஒய்சி புதுப்பிக்கப்பட்ட நிலையில், கிராமப்புறங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆதார் அட்டை மற்றும் பேங்க் அக்கவுண்ட் ஆகிய இரண்டிலும் உள்ள பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் டெமோகிராபிக் விவரங்கள் முழுமையாக ஒத்துப் போகவில்லை என்றும், வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது, ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, கிராமப்புறங்களில் நெட்வொர்க் சரியாக இல்லாமல் இருப்பது, வங்கி கிளையின் சர்வர்கள் சரியாக வேலை செய்யாமல் இருப்பது ஆகிய காரணங்களால், லட்சக்கணக்கான மக்கள் பலமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க நடையாக நடந்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அவர்கள் வெறுத்து போய் அக்கவுண்ட்டை கைவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பத்து வருடத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். கேஒய்சி மூலம் புதுப்பிக்காவிட்டால் ஜன் தன் அக்கவுண்ட் ஃப்ரீஸ் செய்யப்படும் என்ற விதி இருப்பதால், புதுப்பிக்காத அக்கவுண்ட் ஹோல்டருக்கு தானாகவே அக்கவுண்ட் ஃப்ரீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை கிராமப்புற மக்கள், ஏழை எளியோர், மூத்த குடிமக்கள் என்று பலரும் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு மட்டுமாவது இந்த விதியை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: aadhar, jan dhan, kyc