ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள்.. அவதூறுகளுக்கு அன்றே கருணாநிதி தந்த தரமான பதில்

By Keerthana

Published:

சென்னை: தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறான வீடியோக்கள் சிலரால் பரப்பப்படுகின்றன. இந்நிலையில் தம் மீதான அவதூறுகள் குறித்து கருணாநிதி உருக்கமாக பேசிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது. அநத வீடியோவில், என்னை ஏசி ஏசி என்னை பேசி பேசி என தொடங்கி வசைபாடுங்கள்.. வளருவதற்கான உரமாக ஏற்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 1969 முதல் இன்று வரை பேசுபொருளாக இருப்பவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அவர் மறைந்து 6 ஆண்டுகள்தான் ஆகிவிட்ட போதும். அவர் மறைவுக்கு பின்னரும் கருணாநிதியை அவரது அரசியல் எதிரிகள் வசைபாடி வருகின்றனர். இன்றைக்கு வசைமழை அதிக அளவில் தொடருகிறது. அவருக்காக பாடப்பட்ட பாடலை ரீமேக் செய்து மோசமாக வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி அவருக்கு எதிரான வசைகள் தொடர்பாக முன்னர் ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியிருந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.

அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேசியுள்ளதாவது: என்னை ஏசி ஏசி, பேசிப் பேசி, என் குடும்பத்தைப் பற்றி பேசி, என் பெண் குழந்தைககளைப் பற்றி பேசி, என் குழந்தை குட்டிகளைப் பற்றி பேசி, என் தோழர்களைப் பற்றி பேசி, என்னை இழித்துப் பழித்து, இவ்வளவும் ஆகியும் நான் இன்றைக்கும் உங்களால் போற்றப்படுகிறேன். புகழப்படுகிறேன். வரவேற்கப்படுகிறேன்.

இதற்கு காரணம், ஒரு செடியின் கீழே மலத்தைக் கொட்டுவார்கள்; ஒரு செடியின் கீழே மாட்டுச் சாணத்தைக் கொட்டுவார்கள். அது இழிவான பொருள்தான். ஆனால் அந்த மாட்டுச் சாணம், மலம் இதெல்லாம் எருவாகி அந்த மரத்தை செடியை ஓங்கி வளர்க்கும். அதைப் போல என் மீது கொட்டப்படும் மலம் ஆனாலும் சாணம் ஆனாலும் இழிவான மொழிகளானாலும் இவை எல்லாம் எருவாகி என்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

எதிரிகளே! மாற்றுக் கட்சி நண்பர்களே! நன்றாகத் திட்டுங்கள்.. அவற்றை எல்லாம் எருவாக்கிக் கொள்கிறேன். நன்றாக வசைபாடுங்கள். நாங்கள் வளருவதற்கு ஏற்ற உரமாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.