இந்தியாவிற்கு சுற்றுலா வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய நாட்டின் பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி தங்களுடைய செலவுக்கு வைத்துக் கொள்வார்கள் என்ற நிலையில் தற்போது அவர்கள் பணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று ஆர்பிஐ புதிய திட்டம் தெரிவித்துள்ளதை அடுத்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் பேமென்ட் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் யுபிஐ டிஜிட்டல் செயலியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் சில இடங்களில் உள்ள பண பரிமாற்றங்களில் யுபிஐ செயலியில் உள்ள வேலட்டில் பணம் வைத்துக்கொண்டு அதன் மூலம் செலவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட், விசா மற்றும் கேஒய்சி நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு அவர்களுக்கு யுபிஐ பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையை சுற்றுலா பயணிகள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து வேலட்டில் மாற்றி கொண்டு பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும், இதன்மூலம் கையில் ரொக்கம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பும்போது வேலட்டில் மீதிப்பணம் இருந்தால் அதை தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே டிஜிட்டல் பணபரிவர்த்தனை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் யூபிஐ செயலியை பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கனவே யூபிஐ செயலி அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கும் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.