பிளைட்டை மிஸ் பண்ணிட்டிங்களா? அதுக்காகவே ஒரு பாலிசி.. ரூ.3 கொடுத்தால் ரூ.7500 கிடைக்கும்..!

  விமானத்தை பிடிக்க கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செல்லும் சிலர், டிராபிக் பிரச்சனை காரணமாக பிளைட்டை மிஸ் செய்து விடுவார்கள். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், பிளைட்டை மிஸ் செய்தால் ரூ.7,500 வரை பணம்…

flight

 

விமானத்தை பிடிக்க கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செல்லும் சிலர், டிராபிக் பிரச்சனை காரணமாக பிளைட்டை மிஸ் செய்து விடுவார்கள். அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், பிளைட்டை மிஸ் செய்தால் ரூ.7,500 வரை பணம் திரும்ப கிடைக்கும் வகையில் ஒரு பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலிசியை உபேர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. Missed Flight Connection Cover என்ற இந்த திட்டத்தின் படி, பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, கூடுதலாக ரூ.3 மட்டும் காப்பீட்டாக செலுத்தினால் போதும். அவர்கள் விமான நிலையத்திற்கு உபர் டாக்சியில் செல்லும்போது காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக விமானத்தை மிஸ் செய்திருந்தால், அவர்களுக்கு ரூ.7,500 வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,உபேர் டாக்ஸியை முன்பதிவு செய்யும்போது, சேரும் இடம் விமான நிலையம் என்பது கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விமான நிலையத்துக்கு 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்களுக்கு முன்பாக வரவேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், அந்த நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஒரு பயணி இந்த காப்பீட்டை பெற விரும்பினால், அவர் கையொப்பமிட்ட கோரிக்கை படிவம், டிக்கெட் முன்பதிவு குறிப்பு எண், பயண விவரங்கள் ஆகியவற்றையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, விமான டிக்கெட்டின் ஜெராக்ஸ் காப்பி, பயணம் செய்யவில்லை என்பதற்கான உறுதி செய்யப்பட்ட விமான நிறுவனத்தின் சான்றிதழ் ஆகியவற்றையும் ஒப்படைத்தால், அவை பரிசீலனை செய்யப்பட்டு, இன்சூரன்ஸ் தொகை பயணியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் என உபேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விமானத்தை பிடிக்க நாம் சரியான நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பினாலும், சாலை டிராபிக் காரணமாக விமான நிலையம் செல்ல தாமதம் ஏற்பட்டால், கிட்டத்தட்ட நம்முடைய பணம் திரும்ப கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இன்சூரன்ஸ் பாலிசி, விமான பயணிகள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.