இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்துவரும் ராஜ்நாத் சிங், நாட்டின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கூறிய பேட்டி வைரலாகி வருகிறது. குறிப்பாக, போர் விமான எஞ்சின் உற்பத்தி, தற்காப்பு ஏற்றுமதி இலக்குகள் மற்றும் முக்கிய ஆயுத கொள்முதல்கள் குறித்த அவரது வெளிப்படையான கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து விமான எஞ்சின் தயாரிக்கும் திட்டம் குறித்து “ஜி.இ. (GE), சஃப்ரான் (Safran) உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் பல படிகள் முன்னேறிவிட்டோம். எனினும், மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழுவின் ஒப்புதலுக்கு பின்னரே இது முறையாக அறிவிக்கப்படும்.
அடுத்த ஓர் ஆண்டுக்குள், அனைத்து ரக போர் விமானங்களுக்கான எஞ்சின்களும் இந்திய மண்ணில், இந்தியர்களின் கைகளால் தயாரிக்கப்படும் நிலை உருவாகும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து எஞ்சின்களை வாங்கும் நிலை இருந்தாலும், தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இணங்காத எந்த ஒப்பந்தத்திற்கும் இந்தியா சம்மதிக்காது. ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களுக்கான எஞ்சின் உற்பத்தியில், சஃப்ரான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்திய மேம்பட்ட நடுத்தர போர் விமானம் திட்டம் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. அதன் வடிவமைப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளன. இந்த திட்டம் முழுமையடைய 10 ஆண்டுகள் ஆகும் என்று சில வல்லுநர்கள் கூறினாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே இது சாத்தியப்படும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
ராஃபேல் போர் விமானங்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது மிக சிறந்த அனுபவத்தை கொடுத்ததாகவும், அதன் செயல்பாடுகள் பிரம்மிக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும் 114 ராஃபேல் விமானங்கள் கொள்முதல் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன; அதற்கு கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்தார்.
நவீன போர்களில் டிரோன்களின் பங்கு மிக முக்கியம். இந்தியாவும் உள்நாட்டு டிரோன்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டது. அமெரிக்காவின் எம்.க்யூ-9 டிரோன்கள் (MQ-9 Drones) குறித்த ஒப்பந்தங்கள், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து மேலும் S-400 ஏவுகணை அமைப்புகளை வாங்க இந்தியா தயாராக உள்ளது. அதன் தேவைக்கேற்ப மேலும் கொள்முதல் செய்யப்படும். ஆபரேஷன் சிந்தூர்’-ல் பிரம்மோஸ் ஏவுகணைகள் மிகுந்த செயல்திறன் மிக்கதாக இருந்தன. பல நாடுகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன. உள்நாட்டுமயமாக்கலின் மிகப்பெரிய இலக்காக, பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்:
தற்போது சுமார் ரூ.25,000 கோடிக்கு தற்காப்பு ஏற்றுமதியை இந்தியா செய்து வருகிறது. 2029-30 ஆம் நிதியாண்டு முடிவதற்குள், இந்தியாவின் தற்காப்பு ஏற்றுமதியை குறைந்தபட்சம் ரூ.50,000 கோடியாக உயர்த்துவதே இலக்கு. இந்த இலக்கை எட்டுவோம் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
தற்காப்புத் துறையில் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் தற்சார்பு அடைவது மிகச்சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது என்று அவர் திருப்தி தெரிவித்தார். சுமார் 550 பாதுகாப்பு பொருட்களை எந்த சூழ்நிலையிலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாமல், இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே ‘பாசிட்டிவ் இன்டிஜனைசேஷன் லிஸ்ட்’ ஆகும்.
சுமார் 5,000 சிறிய ராணுவ உதிரி பாகங்களுக்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து வாங்குவதை தவிர்த்து, இந்தியாவிலேயே அவற்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 2,500-க்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கிவிட்டன.
இந்தியாவின் நீண்ட தூர ஏவுகணையான அக்னி-VI பரிசோதனை விரைவில் நடைபெறும் என்றும், இது நாட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் சற்று அதிக காலம் எடுத்துக்கொண்டாலும், அது தாமதமாகவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டார். ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தில் இருப்பதாகவும் உறுதி அளித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
