பரேலியை சேர்ந்த ஒருவரின் நேர்மையான நிதியியல் பயணம் குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரெடிட்டில் பதிவிடப்பட்ட இந்த பதிவு அவரது நேர்மை மற்றும் நடைமுறை ஞானத்தால் பலரை கவர்ந்துள்ளது. 35 வயதான அந்த அநாமதேய ரெடிட் தான் கிட்டத்தட்ட கடன் இல்லாத நிலையில் இருப்பதாகவும், நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பும், பெங்களூருவில் இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பும் என இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சொந்தக்காரர் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த பதிவில் கூறியிருப்பதாவது: “நான் ஒருபோதும் புத்திசாலியான மாணவன் அல்ல. ஒரு மாணவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ஆசிரியர்களால் ஒரு உதாரணமாக பயன்படுத்தப்பட்ட மாணவன். 1990 இல் ஜும்கா சிட்டி, பரேலியில் பிறந்த நான், தொடர்ந்து பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டேன், எப்போதும் மோசமாக செயல்பட்டேன், அடுத்த முறை சிறப்பாக செய்வேன் என்று என் பெற்றோரிடமிருந்து எழுத்துப்பூர்வ வாக்குறுதிகள் கொடுத்துத் தான் தேர்வுகளில் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன்.
2013 ஆம் ஆண்டில், நொய்டாவில் முதல் வேலையை பெற்றேன். மாதம் வெறும் ரூ.7,000 மட்டுமே சம்பாதித்தேன். ஒரு சிறந்த வேலையை பெறுவதற்கு முன் 45 க்கும் மேற்பட்ட நேர்காணலை சந்தித்த பிறகு, பெங்களூருவில் முதுகலை டிப்ளோமா படிப்பை தொடர வேலையை விட்டு வெளியேறினேன்.
ஒரு மூத்த HR கொடுத்த ஆலோசனை என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. வாடகை கட்டுவது போல பணத்தை சேமியுங்கள், அது ஒரு தவிர்க்க முடியாத அம்சம். கிரெடிட் கார்டுகளிலிருந்து விலகி இருங்கள். அவை கடன் கொடுப்பதில்லை, அவை உங்களை சிக்கலில் சிக்க வைக்கின்றன’ என்று கூறினார். இந்த ஆலோசனைகளுக்கு பிறகு, நான் செலவழித்த ஒவ்வொரு ரூபாயையும் கண்காணித்தேன், கிரெடிட் கார்டுகளை தேவையற்ற முறையில் பயன்படுத்துவதை தவிர்த்தேன். கூடுமானாரை சிக்கனமாக வாழ்ந்தேன். முதலில் வரி சேமிப்பு நிலையான வைப்புநிதிகளில் (tax-saving fixed deposits) முதலீடு செய்ய தொடங்கினேன். அதன் பின்னர் SIP மற்றும் பங்குகளுக்கு மாறினேன்.
2018 ஆம் ஆண்டில், எனது சேமிப்பு ரூ.5 லட்சமாக வளர்ந்தது. ஒரு புதிய பணியில் போனஸ் மற்றும் இடமாற்ற அலவன்ஸ் ரூ.2 லட்சம் கிடைத்தது. நொய்டாவில், ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையிலான வீடு வாங்க முடிவு செய்தேன். வீட்டு கடனுக்கான ரூ.7 லட்சம் முன்பணம் செலுத்த எனது அப்பா உதவினார். மேலும் என் அப்பா எனக்காக 14 மாத தவணைகளைச் செலுத்தினார். ஒவ்வொரு போனஸையும் கடன் சுமையை குறைக்க பயன்படுத்தினேன்.
2023 ஆம் ஆண்டில், திருமணம் செய்து கொண்டேன். மனைவி கர்ப்பமானபோது, பெங்களூருவில் ஒரு சொத்தை வாங்க விரும்பினேன். இதற்கு மேலும் ரூ.40 லட்சம் கடன் பெறப்பட்டது. இந்த நேரத்தில் என் மனைவியிடம் இருந்தும் நிதியுதவி கிடைத்தது.
மொத்தமாக, ரூ.1 கோடிக்கும் அதிகமான மூன்று கடன்களை பெற்றேன். “ஒழுக்கமான உத்திகளை பயன்படுத்தி படிப்படியாக வீட்டுக்கடன் உள்பட அனைத்து கடன்களையும் முடித்துவிட்டேன். “இன்று, 35 வயதில், நான் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுடன், ஒரு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். மனைவி, ஒரு குழந்தையுடன் கடன் இல்லாதவனாக இருக்கிறேன்” என்று கூறி முடித்துள்ளார்.
பல பயனர்கள் அந்தப் பயனரின் விடாமுயற்சியை பாராட்டினர். ஒருவர், “இது அருமையாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது!” என்று கூறினார். மற்றொருவர், “தோல்விகளை வரையறுப்பதன் மூலம் வெற்றிக்கான ஒரு சிறந்த கதை” என்று எழுதினார்.
சிலர் இந்தக் கதையின் உண்மைத்தன்மையையும் கேள்வி எழுப்பினர். “இந்த சாட்ஜிபிடியால உருவாக்கப்பட்ட பதிவுகள் போன்று தெரிகிறது. இதுபோன்ற பொய்யான தகவல்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
