ஒரு தம்பதியருக்கு மகன் பிறந்து விட்டால் அவரது தாய்க்கு தான் அதிக பாசம் இருக்கும் என ஒரு கூற்று உள்ளது. அதே போல, மகள் என வந்து விட்டால் தாயை விட தந்தை தான் அதிக பாசம் கொடுப்பார்கள் என்பதும் பல குடும்பங்களில் இயல்பாக பேசப்பட்டு வருவதை நான் நிறைய கவனித்திருப்போம். மகள் என்றாலே தந்தையின் லிட்டில் பிரின்சஸ் என்ற பெயரில் சமீப காலமாக அதிக மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவதையும் நாம் கவனித்திருப்போம்.
பெண்கள் என வரும் போது அவர்கள் பிறந்து எத்தனை வயது ஆனாலும் என்றென்றும் தந்தைக்கு அவர் சுட்டிக் குழந்தைதான். அப்படிப்பட்ட மகள் என்ன செய்தாலும் அதன் மூலம் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளாமல் முழுக்க முழுக்க பாசத்தை மட்டுமே கொடுப்பதும் தான் பெரும்பாலான தந்தைகளின் வேலையாகவும் உள்ளது.
மகள் சமைத்த உணவு
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று ஒரு வீடியோவில் மகள் தனக்காக முதல் முறையாக சமைத்த உணவை தந்தை உண்ட போது அவர் கொடுத்த ரியாக்ஷன் தொடர்பான வீடியோ பலரையும் நெகிழ வைத்து வருகிறது. ரித்து தாஸ் குப்தா என்ற பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தந்தைக்காக உணவை தயார் செய்து அதனை அவரிடம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை முழுக்க முழுக்க வீடியோவில் பதிவு செய்துள்ள அவர், ‘அப்பா நான் முதல் முறையாக உங்களுக்காக உணவு தயார் செய்துள்ளேன். உங்களுக்கு பிடித்திருக்கிறதா?’ எனக் கேட்க பதிலுக்கு தந்தையோ அதனை உண்டபடி, ‘எனது மகளே, நான் வாழ்க்கையில் அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன். அந்த அன்னபூர்ணா தேவியே சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்து எனக்காக உணவு கொடுத்தது போன்ற உணர்வை கொடுக்கிறது’ என குறிப்பிடுகிறார்.
தந்தை கொடுத்த ரியாக்ஷன்
ஆனால் அந்த தந்தை இப்படி சொல்லி முடித்ததுமே அந்த அறையில் இருந்த குடும்பத்தினர் அனைவருமே சிரிக்க தொடங்கி விட்டனர். இதற்கு காரணம் மகள் சமைத்த உணவு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்று தான் தெரிகிறது. தொடர்ந்து தந்தையிடம், ‘அந்த அளவுக்கு சிறப்பாக நான் சமைத்த உணவு இல்லையே’ என்றும் சிரித்துக் கொண்டு கேட்கிறார்.
ரித்துவின் தாயாரும் சிரித்துக் கொண்டே இருக்க மகள் எப்படிப்பட்ட ஒரு உணவை சமைத்தாலும் அது தந்தைக்கு சுவை மிகுந்த உணவு தான் என்பதையும் இந்த வீடியோ எடுத்துரைக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.