உத்தரப்பிரதேச மாநிலத்தில் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன், தந்தையே ஓடி போய் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணத்திற்கு தந்தையின் பெற்றோர்களான தாத்தா-பாட்டியும் உதவி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான ஷகீல் என்பவர், தனது மகன் அமன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆயிஷா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தார். அதன்பின், திருமண வேலைகள் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்த நிலையில், திருமண வேலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆயிஷாவுடன் ஷகீல் அடிக்கடி பேசி வந்ததாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் இது இயல்பாக இருந்தாலும், ஷகீலின் மனைவிக்கு போக போக சந்தேகம் ஏற்பட்டது.
விடிய விடிய ஆயிஷாவுடன் பேசுவது, ஆபாசமான புகைப்படங்களை பரிமாறி கொள்வது ஆகியவற்றைக் கண்டபோது சந்தேகமடைந்த ஷகீலின் மனைவி தனது மகன் அமனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அமனுக்கும் தனது வருங்கால மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், திடீரென ஷகீல், ஆயிஷாவுடன் தலைமறைவானதாகவும், வீட்டில் இருந்த நகை, பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிகிறது. மேலும், ஷகீல் தனது மனைவிக்கு போன் செய்து, தான் ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டதாகவும், இந்த திருமணத்தை தனது தாய் தந்தையே நடத்தி வைத்ததாகவும் தெரிவித்தது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை, அதாவது மருமகளாக போகும் பெண்ணை மாமனாராக போகும் ஒருவர் திருமணம் செய்து கொண்டது கேவலமாக இருக்கிறது” என்று அந்த பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து குடும்பத்தினர் யாரும் புகார் செய்யவில்லை என்றும், புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

