தமிழக அரசியலில் தற்போது வீசி கொண்டிருக்கும் மாற்றத்திற்கான காற்று, பல ஆண்டுகளாக நிலவி வந்த இருதுருவ அரசியலை வேரோடு சாய்க்கும் வல்லமை கொண்டதாக உருவெடுத்துள்ளது. வெறும் 2 ஆண்டுகளே ஆன ஒரு கட்சி, எந்தவொரு பெரிய கூட்டணியும் இல்லாமல் தனித்து போட்டியிடும் துணிச்சலை பெற்றுள்ளது என்றால், அதன் பின்னணியில் ஆழமான மக்கள் ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது. திராவிட கட்சிகளின் ஆட்சி முறை, ஊழல் புகார்கள் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றால் சலிப்படைந்த மக்கள், ஒரு மாற்றத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்று அந்த மாற்றத்திற்கான முகமாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் விஜயகாந்த் அல்லது கமல்ஹாசன் போன்ற ஆளுமைகள் அரசியலுக்கு வந்தபோது இருந்ததை விட, தற்போது விஜய் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகள் கழித்து விஜயகாந்த் ஒரு எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், திராவிட கட்சிகளின் கட்டமைப்பை முழுமையாக தகர்க்க முடியவில்லை. ஆனால், தவெகவின் தற்போதைய எழுச்சியானது, பாரம்பரிய வாக்கு வங்கிகளை கூட அசைத்து பார்க்கும் சக்தியாக மாறியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவு விஜய்க்கு இருப்பதால், 2026 தேர்தல் களம் திராவிட கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போவது உறுதி.
ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே தங்களது அதிகார பலம் மற்றும் பண பலத்தை கொண்டு எதனையும் சாதித்துவிடலாம் என்று நம்பி கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு “மக்கள் புரட்சி” வெடிக்கும் போது, இத்தகைய கோடிக்கணக்கான பணமும், மெகா கூட்டணிகளும் வெறும் தூசுக்கு சமமானவை என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது. மக்கள் ஒருவரை தங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டால், அங்கு மற்ற அனைத்து அரசியல் கணக்குகளும் தலைகீழாக மாறிவிடும். தற்போதைய சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே தங்களது கோட்டைகளை தக்கவைக்கப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரு மும்முனை போட்டி நிலவுகிறது. வழக்கமாக திராவிடக் கட்சிகளுக்குள் மாறி மாறி சென்று கொண்டிருந்த அதிகாரம், இப்போது ஒரு மூன்றாவது திசையை நோக்கி திரும்பியுள்ளது. மக்களின் இந்த அதிருப்தி என்பது ஏதோ ஒரு நாளில் உருவானது அல்ல; இது பல ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்ட கோபத்தின் வெளிப்பாடாகும். “மக்களின் பவர் என்ன?” என்பதை அரசியல்வாதிகள் உணரும் தருணம் நெருங்கிவிட்டது. தேர்தல் என்பது வெறும் வாக்குப்பதிவு அல்ல, அது ஒரு சமூகத்தின் நீண்டகால ஏக்கத்திற்கான தீர்வாக மாறப்போகிறது.
பல்வேறு கருத்துக்கணிப்புகள் தவெகவிற்கு 20 முதல் 25 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என்று கூறினாலும், கள யதார்த்தம் அதைவிட அதிகமாகவே உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில், இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் ஒரே நேரத்தில் பின்னடைவை சந்திப்பது என்பது தமிழக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும். ஒரு தனி மனிதனின் செல்வாக்கு என்பதை தாண்டி, ஒரு மாற்று அரசியலுக்கான தேவையே விஜய்யின் கட்சிக்கு இத்தனை பெரிய அங்கீகாரத்தை தந்துள்ளதோடு, ஆளுங்கட்சியின் “ஏஜென்ட்” போன்ற விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கியுள்ளது.
மொத்தத்தில் 2026-ன் தேர்தல் முடிவுகள் என்பது வெறும் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடையாது; அது தமிழகத்தின் அடுத்த 50 ஆண்டுகால அரசியலை தீர்மானிக்க போகும் ஒரு தீர்ப்பு. மக்கள் சக்தியின் முன் எந்தவொரு அதிகார மையமும் நிலைக்காது என்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும். மௌனமாக தனது வேலைகளை பார்த்து கொண்டிருக்கும் விஜய்யின் வியூகம், தேர்தல் நாளில் ஒரு மாபெரும் கிளைமாக்ஸை எட்டும் என்று அவரது தொண்டர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கை வீண்போகுமா அல்லது வரலாறாக மாறுமா என்பது மக்களின் விரல் நுனியில் தான் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

